செம்மொழி மாநாட்டுக்கு 200 கோடி ரூபாய் செலவு செய்தது திமுக, அமைச்சர் ஜெயக்குமார்
Chennai: தமிழக அரசு சார்பில், எம்.ஜி.ஆர் நாற்றாண்டு விழா தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. இது குறித்து திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. அதற்கு பதிலடி கொடுத்துள்ளது அதிமுக.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து தமிழக எதிர்கட்சித் தலைவரும் திமுக-வின் தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘அதிமுக அரசால் கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அரசியல் ஆதாயத்துக்காகத் தான் இந்த விழாக்கள் மாவட்டம் தோறும் நடத்தப்படுகின்றன’ என்று விமர்சனம் செய்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘செம்மொழி மாநாட்டுக்கு செலவு செய்யப்பட்ட தொகையுடன் ஒப்பிட்டால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டுக்கு செலவு செய்யப்படும் தொகை மிகக் குறைவானது. உண்மை இப்படியிருக்க திமுக எப்படி, எம்.ஜி.ஆர் நாற்றாண்டு விழா குறித்து பேசலாம்’ என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும், ‘2010 ஆம் ஆண்டு செம்மொழி மாநாட்டுக்கு செலவு செய்த தொகையில் 10 சதவிகிதத்தைக் கூட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு நாங்கள் செலவு செய்யவில்லை. செம்மொழி மாநாட்டுக்கு 200 கோடி ரூபாய் செலவு செய்தது திமுக. நாங்கள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களுக்கு செலவு செய்த தொகை குறித்து தகவல்களை வெளியிடத் தயார். இரண்டையும் மக்களே ஒப்பிடட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு, கருணாநிதி தலைமையில் ஆட்சியில் இருந்த திமுக, கோயம்புத்தூரில் செம்மொழி மாநாட்டை பெரும் செலவுடன் நடத்தியது. இந்த விழாவை எதிர்கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கடுமையாக சாடின. 2009 ஆம் ஆண்டு நடந்த ஈழப் போரில் சரியாக செயல்படாததை மறைக்க திமுக செம்மொழி மாநாட்டை நடத்துகிறது என்று எதிர்கட்சிகள் விமர்சித்தன.