This Article is From May 11, 2020

விழுப்புரம் சிறுமி படுகொலையில் தொடர்புடைய அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கம்!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார்.

விழுப்புரம் சிறுமி படுகொலையில் தொடர்புடைய அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கம்!!

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • விழுப்புரம் சிறுமி படுகொலையில் 2 அதிமுகவினருக்கு தொடர்பு என புகார்
  • கலியபெருமாள், முருகன் ஆகியோர் அதிமுகவிலிருந்து நீக்கம்
  • எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்

விழுப்புரம் சிறுமி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிமுகவினர் கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 95 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் அதிமுக பிரமுகர்களான கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. முன்விரோதம் காரணமாக இந்த கொடூர கொலை நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கட்சிப்பொறுப்பில் இருந்து கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், காகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த சிறுமதுரை புதுக்காலணி கிளைக் கழக செயலாளர் கலிய பெருமாள், சிறுமதுரை காலணி  கிளைக்கழக மேலமைப்பு பிரதிநிதி முருகன் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

.