This Article is From Mar 30, 2019

மாம்பழத்திற்கு பதில் ’ஆப்பிள் சின்னத்திற்கு’ வாக்கு சேகரித்து அசத்திய அமைச்சர்!

அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமகவிற்கு வாக்கு சேகரிக்கும் போது, அந்த கட்சியின் சின்னமான ’மாம்பழம் சின்னத்தை’ மறந்து ஆப்பிள் சின்னத்திற்கு வாங்களியுங்கள் என்று பொதுக்கூட்டத்தில் உளறி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

Advertisement
இந்தியா Written by

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. இதேபோல், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றுள்ளன. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக அமைப்பு செயலாளர் நத்தம் விசுவநாதன் ஆகியோர் திண்டுக்கல் தொகுதியில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Advertisement

இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சின்னத்தையே மறந்து விட்டு அனைவரும் ‘ஆப்பிள் சின்னத்திற்கு' வாக்களியுங்கள் என்று கூறினார்.

இதனை கேட்ட பொதுமக்கள் மாம்பழம், மாம்பழம் என சத்தம் எழுப்பினர். உடனடியாக அமைச்சரின் உதவியாளர்கள் அமைச்சரின் காதில் ஆப்பிள் அல்ல 'மாம்பழம்' என்பதை நினைவுபடுத்தினார். பின்னர் தன் தலையில் அடித்துக்கொண்ட அமைச்சர், 'மாம்பழம்' என்று கூறிவிட்டு, 'ஊடகங்களுக்கு செய்தி கிடைத்துவிட்டது என்று சிரித்துக்கொண்டே சமாளித்தார்.

Advertisement
Advertisement