This Article is From Jan 24, 2020

“அதிகாரம் சிறுகச் சிறுக மத்திய அரசுக்குச் செல்கிறது..!”- அதிமுக அமைச்சர் பற்றவைக்கும் வெடி!!

“மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரம் சிறுகச் சிறுக மத்திய அரசுக்குக் கீழ் செல்வதாகவே தெரிகிறது"

Advertisement
தமிழ்நாடு Written by

"மாநில அரசுகளுக்கு இருக்கும் பல அதிகாரங்கள் மத்திய அரசின் வசம் சென்று கொண்டிருக்கின்றன"

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவும் மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவும் கூட்டணியில் இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு உருவான இந்தக் கூட்டணி, ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்ந்தது. ஆனால், சமீப காலமாக இரு கட்சிகளுக்கும் இடையில் சுமூகப் போக்கு இல்லை. குறிப்பாக பெரியார் - ரஜினி சர்ச்சையில் இரு கட்சித் தலைவர்களும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பேசுகையில், வெளிப்படையாகவே பொதுத்தளத்தில் மோதிக் கொள்கிறார்கள். இதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் மாநில தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஒரு கருத்தை முன் வைத்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாண்டியராஜன், “மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரம் சிறுகச் சிறுக மத்திய அரசுக்குக் கீழ் செல்வதாகவே தெரிகிறது. இதற்கு ஒரு நல்ல உணாரணம். ஜி.எஸ்.டி வரிமுறை. ஜி.எஸ்.டி வந்ததில் இருந்து நமக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைப் பெற மத்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறோம். 

ஜி.எஸ்.டி வரிமுறை அமல் செய்தபோது, அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, ‘அனைத்து மாநிலங்களும் தங்களது தன்னுரிமையை ஜி.எஸ்.டி கவுன்சிலடம் சமர்பிக்கிறது. மத்திய அரசும் தனது தன்னுரிமையை ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் சமர்பிக்கிறது' என்பார். ஆனால், இதுநாள் வரை ஜி.எஸ்.டி கவுன்சில் குறித்தான ஒரு தெளிவு இருக்கவில்லை. இது ஒரு உதாரணம்தான். இதைப் போன்று மாநில அரசுகளுக்கு இருக்கும் பல அதிகாரங்கள் மத்திய அரசின் வசம் சென்று கொண்டிருக்கின்றன,” என்று பேசினார். 

Advertisement

ரஜினியின் பெரியார் குறித்த கருத்துகளுக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பாஜக தலைவர்கள், ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக, ரஜினியை சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறது. ரஜினியின் சர்ச்சை பேச்சு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ, “இந்த நாட்டில் சாதி ஒழிய வேண்டும் என்றும், தீண்டாமை போக்கப்பட வேண்டும் என்றும் தனது 95 வயது வரை போராடியவர் பெரியார். அப்படிப்பட்ட மதிக்கத்தக்கத் தலைவரை ஒரு சம்பவத்தை வைத்து அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 
 

Advertisement