This Article is From Nov 08, 2018

விஜய்-ன் சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தொடர் போராட்டம்

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி அவற்றை அகற்ற வேண்டும் என அதிமுக அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விஜய்-ன் சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தொடர் போராட்டம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆளும் அதிமுக உறுப்பினர்கள் விஜய்க்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Chennai:

தீபாவளிக்கு வெளியான விஜய்-ன் சர்கார் திரைப்படம் மாநிலத்தின் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி தமிழக அமைச்சர்கள் பலர் படத்தின் நாயகன் விஜய்-க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுகையில், சமூகத்தில் பதற்றத்தையும், வன்முறையையும் ஏற்படுத்துவதற்கு இந்தப் படம் தூண்டுகோலாக அமையும். இது தீவிரவாதத்திற்கு குறைவில்லாத செயல். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக சர்கார் படம் உள்ளது. படத்தின் நடிகர் மற்றும் அவரது குழு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மற்றொரு அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் இந்த விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையே, தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் சர்கார் படம் சிகரெட் பிடிப்பதை ஊக்கப்படுத்துவதாக கூறி, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் விஜய்க்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சர்கார் படம் வெளியான 2 நாட்களில் மட்டும் ரூ. 100-கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தில் மிக்ஸி, பேன்கள் தீயிட்டு கொளுத்தப்படும் காட்சி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011-ல் கொண்டு வந்த இலவச திட்டங்களை குறிப்பதாக அதிமுகவினர் குறிப்பிடுகின்றனர்.

மதுரையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

விஜய் படத்திற்கு சிக்கல் வருவது என்பது இது முதல் முறையல்ல. 2017-ல் மெர்சல் திரைப்படம் வந்தபோது அது மத்திய அரசின் திட்டங்களைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக கூறி பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. குறிப்பாக மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி., சேவை வரி, பணமதிப்பிழப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பாக சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதாக பாஜக குற்றம்சாட்டி போராட்டம் நடத்தியது.

.