“இப்படிப்பட்ட ஒரு விஷயத்துக்காக என் மீது அதிமுக நடவடிக்கை எடுத்தால், அதை மனப்பூர்வமாக வரவேற்பேன்”
இன்று, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் இது என்பதால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன், கூட்டம் தொடங்கப்பட்டது. அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான, தமிமுன் அன்சாரி. மனிதநேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். அதிமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டு எம்எல்ஏ பதவியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்று அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியே வந்த அவர், “என் மீது நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்ளத் தயார்,” என்று சவால் விட்டுள்ளார்.
சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, “இந்திய அரசியல் சட்ட சாசனத்துக்கு எதிரான நாசகர சட்டங்களான குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தமிழகத்திலும் பெரும்பான்மை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் இந்தச் சட்டத்திற்கு எதிராகத்தான் இருக்கின்றன.
பிகார், பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இந்தச் சட்டங்களை தங்கள் மாநிலங்களில் அமல் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. கேரளா, இந்தச் சட்டங்களுக்கு எதிராக தனது சட்டப்பேரவையில் தீர்மானமே போட்டுள்ளது.
இப்படி இருக்கையில் இந்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு மவுனம் காப்பது சரியல்ல. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் ஜனநாயகப் பூர்வமாக எனது எதிர்ப்பைத் தெரிவித்து, பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தேன்.
இன்று ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசு ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதிமுவின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான, சமூகநீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா, சிஏஏவுக்கும் என்ஆர்சிக்கும் எதிராக நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர். அவர் வழிவரும் அதிமுக அதைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்,” என்றார்.
தொடர்ந்து நிருபர்கள், “உங்களது இந்த நடவடிக்கைக்கு எதிராக அதிமுக, கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்தால்,” எனக் கேட்க, “இப்படிப்பட்ட ஒரு விஷயத்துக்காக என் மீது அதிமுக நடவடிக்கை எடுத்தால், அதை மனப்பூர்வமாக வரவேற்பேன்,” என்று அதிரடி காட்டினார்.