This Article is From Sep 19, 2018

‘ஒரு ஊழலின் ஒப்பாரி!’- ஸ்டாலின் விமர்சித்த அதிமுக

திமுக தலைவர் ஸ்டாலின்(stalin) தலைமையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

‘ஒரு ஊழலின் ஒப்பாரி!’- ஸ்டாலின் விமர்சித்த அதிமுக

தமிழக அரசுக்கு எதிராக திமுக-வினர் நேற்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். திமுக தலைவர் ஸ்டாலின்(Stalin) தலைமையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பல ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழக அரசு சிக்கித் தவித்து வருகிறது என்று குற்றம் சாட்டிய திமுக, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரியது. இந்நிலையில் அதிமுக-வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘புரட்சித் தலைவி நமது அம்மா’, ஸ்டாலினை விமர்சனம் செய்து தலையங்கம் எழுதியுள்ளது. 

இது குறித்து ‘ஒரு ஊழலின் ஒப்பாரி’ என்று தலைப்பிட்ட தலையங்கத்தில், ‘ஜெயலலிதா வழி நின்று நல்லாட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து தமிழகத்தில் ஒரு புதிய எழுத்தியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும், கட்சி உடைந்து சிதைந்து விடும் என்றெல்லாம் கனவு கண்டவர்கள் பொய்யாகிப் போய்விட்டதே என்ற விரக்தியில் வேதனையில், நாள்தோறும் ஒப்பாரி வைத்துக் கொண்டிரிக்கிறார்கள். எப்படியாவது இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு முதலமைச்சர் பதவியில் அமர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தினமும் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருக்கிறார். 

ஆளுங்கட்சியை எதிர்த்து எதிர்கட்சியினர் போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை தான். அந்த உரிமை ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டும். நியாயமான கோரிக்கைகளுக்காக போராட வேண்டும். தவறு யார் செய்தாலும் அதை தண்டிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அதை சுட்டிக்காட்ட வேண்டிய தார்மீக உரிமை எதிர்கட்சிக்கு உண்டு. அதையெல்லாம் விடுத்து, ஐயோ ஊழல் நடந்து விட்டது. இந்த ஆட்சியை அப்புறப்படுத்துங்கள் என்று நாள்தோறும் ஓலமிடுவது உலகில் எந்தக் கட்சியும் செய்யாத அநாகரீக செயலாகும். ஸ்டாலினுக்கு வயதாகிவிட்டதே தவிர இன்னும் அவர் பக்குவப்படவில்லை என்பதைத் தான் நேற்றைய ஆர்ப்பாட்டம் எடுத்துக் காட்டுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.