தேமுதிக பொருளாளர் பிரேமலதா அளித்துள்ள பேட்டி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைலைட்ஸ்
- அதிமுக ஆட்சிக்கு தேமுதிக தான் காரணம் என்று பிரேமலதா கூறியுள்ளார்
- பிரேதமலதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமாரும் பதில் அளித்துள்ளார்
- பிரேமதலா தனது கருத்தை தவிர்த்திருக்கலாம் : ஜெயக்குமார்
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக ஆட்சி தற்போது இருக்கிறது என்றால் அதற்கு தேமுதிக தான் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும் என்று கூறினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரேமலதாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியதாவது-
சட்டமன்றத்தில் எந்தக் கட்சி இருக்கிறதோ அதை வைத்துதான் ஆட்சியை அமைக்க முடியும். தேமுதிகவை பொறுத்தவரையில் எங்களுக்கு உதவி செய்கிறோம் என்று வேண்டுமானால் கூறலாம்.
சட்டமன்றம்தான் ஆட்சியை நடத்துகின்ற இடம். அதில் அதிமுக பெரும்பான்மையாக இருக்கிறது. கடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனித்தே போட்டியிட்டு ஆட்சியை அமைத்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரேமலதா கருத்து குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், '' தேமுதிக கட்சியை உயர்த்திப் பிடிப்பதற்காக பிரேமலதா சில கருத்துகளை கூறலாம். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இதுபோன்ற பேச்சுகளை தவிர்த்திருக்கலாம் என்பதுதான் எனது கருத்து'' என்று தெரிவித்தார்.