அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையே தேவை என அக்கட்சி எம்எல்ஏக்கள் சிலர் கருத்து தெரிவித்த நிலையில், இதுகுறித்து சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,
இன்று திமுக மட்டுமல்ல சில எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு, எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் என திமிங்கலம், சுறா மீன் போன்று தவியாய் தவித்து வருகின்றனர். அதனால், நாம் அதற்கு இடம் அளித்து விடக்கூடாது.
ஒற்றைத் தலைமை என்பதை காலம் தான் முடிவு செய்யும், கோடிக்கணக்கான தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. எதிரிகள் எப்படியாவது, பிளவு ஏற்படாதா? ஆட்சியை கவிழ்த்து விடலாமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு எவ்வித இடமும் கொடுக்காமல், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாய் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கைகளை பின்பற்றி 'கப்சிப்' என்று இருக்க வேண்டும்.
அதிமுகவை பொறுத்தவரை எந்த பிளவும் ஏற்படவில்லை, பிளவு இருப்பது போன்று ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினராக கருத்து தெரிவிக்கிறார். அதற்கு தலைமைக் கழகம் பொது வெளியில் விவாதிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது. இதெல்லாம் உட்கட்சி விவகாரங்கள், அதனால் இது அறையில் பேச வேண்டிய விஷயங்கள். அறையில் விவாதிக்க வேண்டியதை அறைக்குள்தான் விவாதிக்க வேண்டும், அம்பலத்தில் விவாதிக்கக்கூடாது.
எதிர்கட்சிகளின் சதிவலையில் அதிமுகவினர் சிக்கிக்கொள்ளக்கூடாது. ஒன்றரை கோடி பேர் கொண்ட அதிமுகவில் அண்ணன் - தம்பி பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். எப்படியாவது கட்சியை உடைத்து விடலாம் என நினைத்தால், அது நிறைவேறாத கனவு.
கட்சியில் எந்த பரபரப்பும் இல்லை. 12ஆம் தேதி கூட்டம் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம், எந்த எதிர்கட்சி நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. 2021ல் மீண்டும் நாங்கள் தான் ஆட்சி செய்வோம் என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.