This Article is From Nov 07, 2018

’20 தொகுதியிலும் அதிமுக வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று..!’ - செங்கோட்டையன் பேச்சு

தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘அடுத்து நடக்க உள்ள இடைத் தேர்தலில் அதிமுக-வின் வெற்றி உறுதி’ என்று பேசியுள்ளார்.

’20 தொகுதியிலும் அதிமுக வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று..!’ - செங்கோட்டையன் பேச்சு

எந்நேரமும் இடைத் தேர்தல் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றம் செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சித்தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்ட போது, தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியும், நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் வழக்கு 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என கடந்த அக்டோபர் 25-ல் தீர்ப்பளித்தார்.

இதைத்தொடர்ந்து, ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 2 தொகுதிகள் உட்பட, 20 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக வலுத்து வருகிறது. இதனிடையே டிடிவி தினகரன் அணியினரும் மேல்முறையீடு செல்லவில்லை, தேர்தலை சந்திக்க தயார் என தெரிவித்து வருகின்றனர்.

முதலில் தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வோம் என்ற கூறி வந்த தினகரன் தரப்பு, தற்போது அதிலிருந்து பின் வாங்கியுள்ளது. இதனால் எந்நேரமும் இடைத் தேர்தல் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ‘தமிகழகத்தில் அதிமுக தொடர்ந்து நல்லாட்சி நடத்தி வருகிறது. மக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. எனவே, இடைத் தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் 20 தொகுதியிலும் அமோக வெற்றி பெறுவோம். அதிமுக-வின் வெற்றி இப்போதே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று தான்' என்று நம்பிக்கையுடன் பேசினார்.

.