By-election Result- தமிழகத்தில் காலியாக இருந்த சட்டமன்றத் தொகுதிகளான விக்கிரவாண்டி (Vikravandi) மற்றும் நாங்குநேரிக்கு (Nanguneri), கடந்த 21 ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இரு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான அதிமுக-வே (ADMK) தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. விக்கிரவாண்டியில் திமுக-வும், நாங்குநேரியில் திமுக (DMK) கூட்டணியில் இருந்த காங்கிரஸும் (Congress) போட்டியிட்டன. இரண்டு தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் இந்த தேர்தலில் மொத்தம் 1,13,428 வாக்குகளை பெற்றிருக்கிறார். அதேபோல நாங்குநேரி இடைத் தேர்தலில், அதிமுக-வின், நாராயணன், 33 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் இறுதி நிலவரம்!
அதிமுக (முத்தமிழ்செல்வன்) - 1,13,745
திமுக (புகழேந்தி) - 68,828
வித்தியாசம் - 44,924
நாங்குநேரி இடைத் தேர்தல் இறுதி நிலவரம்!
அதிமுக (நாராயணன்) - 95,360
திமுக (ரூபி மனோகரன்) - 61,913
வித்தியாசம் - 33,445
தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,
‘எதைச் செய்ய முடியுமோ, அதை மட்டும்தான் சொன்னோம். எதிர்கட்சிகளோ பொய்களை அவிழ்த்துவிட்டது. இது உண்மைக்கு கிடைத்த வெற்றி,' என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்வி பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
‘ஆளும் கட்சியின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், சில கட்சிகள் திட்டமிட்டுக் கிளப்பிய சாதி உணர்வு ஆகியவற்றையும் மீறி, பல்லாயிரக்கணக்கான மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது, அண்ணாவின் கூற்று. அந்த அடிப்படையில் மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம்,' எனக் கூறியுள்ளார்.