தகாத உறவுக்கு எதிராக இருக்கும் சட்டத்தை பல நாடுகள் ரத்து செய்துவிட்டன, உச்ச நீதிமன்றம்
New Delhi: Adultery Law, Section 497: 150 ஆண்டுகள் பழமையான தகாத உறவு குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில் நீதிமன்றம், ‘பெண்ணுக்கு எதிராக பாகுபாடு காட்டக் கூடாது’ என்று தெரிவித்துள்ளது.
தகாத உறவு தொடர்பான சட்டத்தில், சம்பந்தப்பட்ட ஆண் குற்றவாளி எனவும், பெண் ஒரு ‘ப்ராப்பர்டி’ என்பது போன்ற நிலை தான் நீடித்து வருகிறது. பெண்ணுக்கு பாகுபாடு காட்டக் கூடாது என்று கோரி உச்ச நீதின்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆணுடன் பெண்ணுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘பண்பட்ட ஒரு சமூகத்தில் எந்தவொரு சட்டம் பெண்ணுக்கு பாகுபாடு காட்டக் கூடாது. அப்படி இருந்தால் அது சட்ட சாசனத்துக்கு எதிரானது ஆகும். தகாத உறவு என்பது ஒரு குற்றமல்ல. அதே நேரத்தில் அது விவகாரத்துக்கான ஒரு காரணியாக அமையலாம்’ என்று கூறினார்.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில், தகாத உறவு என்பது தொடர்ந்து குற்றமாகவே கருதப்பட வேண்டும். அப்படி இருந்தால் தான் திருமணத்தின் புனிதம் பாதுகாக்கப்படும் என்று வாதிடப்பட்டது.
இதற்கு முன்னர் 3 முறை, தகாத உறவு குறித்தான வழக்கு செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தது உச்ச நீதிமன்றம். ஆனால் அந்த வழக்கு மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதையடுத்து கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம், ‘ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்பட வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. பெண் ஒன்றும் ஆணுக்குக் கீழ் அடிபணிந்து இருக்கும் ஒருவர் அல்ல’ என்று கருத்து கூறியிருந்தது.