'கடைசியாக, குற்றவாளிகள் தூக்கிலிடப்படவுள்ளனர். இப்போதுதான் எனக்கு நிம்மதி ஏற்படுகிறது' என்கிறார் ஆஷா தேவி.
New Delhi: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை 5.30-க்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதுகுறித்து பேட்டி அளித்துள்ள நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, தனது மகளின் ஆத்மா 7 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் சாந்தி அடையும் என்று கூறியுள்ளார்.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் டெல்லி நீதிமன்றம் நிராகரித்து விட்டது. நாளை காலை 5.30-க்கு அவர்கள் தூக்கிலிடப்படவுள்ளனர்.
நிர்பயா வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படி குற்றவாளிகள் அக்சய் தாகூர் 31, பவன் குப்தா 25, வினய் சர்மா 26, முகேஷ் சிங் 32 ஆகியோர் நாளை காலை 5.30-க்கு தூக்கிலிடப்படவுள்ளனர்.
முன்னதாக தாங்கள் நிரபராதி என்று நிரூபிப்பதற்குச் சட்டம் வாய்ப்புகள் இன்னும் உள்ளன. எனவே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குற்றவாளிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் இர்பான் அகமது கூறுகையில், 'குற்றவாளிகளுக்குச் சட்ட வாய்ப்புகள் ஏதும் இல்லை. பவன் மற்றும் அக்சய் ஆகியோரின் இரண்டாவது கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். குற்றவாளிகள் 100 மனுக்களைத் தாக்கல் செய்யலாம். அதையெல்லாம் சட்ட தீர்வுகளாக ஏற்றுக் கொள்ள முடியாது' என்று தெரிவித்தார்.
இன்றைய வழக்கு விசாரணையின்போது சுவாரஸ்யமான காட்சிகள் நீதிமன்றத்தின் வெளியே நடந்தன. குற்றவாளி ஒருவரின் மனைவி தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினார். அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு காணப்பட்டது.
இன்னொரு திருப்பமாகக் குற்றம் நடந்தபோது தான் டெல்லியிலேயே இல்லை என்று கூறி, குற்றவாளி முகேஷ் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை நீதிமன்றம் நிராகரித்தது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடியானது.
டிசம்பர் 16, 2012-ல் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே தள்ளி விடப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அத்துடன் பெண்கள் பாதுகாப்புக்காகப் பல சட்டங்களையும், சட்ட மாறுதல்களையும், திட்டங்கள் உருவாக்கத்தையும் இந்த சம்பவம் உண்டாக்கியது.
வழக்கில் 6 பேர் குற்றவாளிகள். அவர்களில் ஒருவர் சிறுவர் ஆவார். அவர் 3 ஆண்டுகள் சிறார் காப்பகத்தில் தண்டனையை முடித்துக்கொண்டு வெளியேறினார். இன்னொரு குற்றவாளி நீதிமன்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள, நாளை காலை 4 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.