This Article is From May 05, 2020

‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக’ கூறிய போலி மருத்துவர் மீது பாய்ந்த நடவடிக்கை!

"பெருந்தொற்று நோய் காலத்தில் தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என்று அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”

‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக’ கூறிய போலி மருத்துவர் மீது பாய்ந்த நடவடிக்கை!

"திரு.க.திருத்தணிக்காசலம் என்பவர் கோவிட் - 19 எனும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு..."

ஹைலைட்ஸ்

  • தன்னை சித்த மருத்துவர் என்று சொல்கிறார் திருத்தணிகாச்சலம்
  • கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அவர் அறிவிப்பு
  • இந்த அறிவிப்பைத் தொடர்ந்துதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

சென்னையைச் சேர்ந்த போலி மருத்துவர் திருத்தணிகாச்சலம் என்பவர், கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக வதந்தி பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கோவிட் - 19 எனும் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ்-அப், முகநூல் போன்ற எலக்ட்ரானிக் மீடியாவில், பொது சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் The Epidemic Diseases Act and Regulations பிரிவு 8-ன்படி தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மேற்கண்ட வைரஸூக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, மைய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாத சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் திரு.க.திருத்தணிகாசலம் என்பவர் கோவிட் - 19 எனும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு, பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால், அவர் மீது உடனடியாக உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க, இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றம் ஓமியோபதித் துறை அவர்களால் சென்னை, காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெருந்தொற்று நோய் காலத்தில் தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என்று அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

.