சமீபத்தில், Film Companion செய்தி நிறுவனத்துக்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா, பார்வதி, ஆலியா பட், மனோஜ் பாஜ்பாய், ரன்வீர் சிங், ஆயுஷ்மன் குரானா, தீபிகா படுகோன் ஆகியோர் பேட்டி கொடுத்தனர். அதில் நடிகை பார்வதி, ‘அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு படம் குறித்துப் பேசியது படுவைரலானது. அதற்கு தற்போது அந்தப் படத்தின் கதாநாயகன், விஜய் தேவரகொண்டா, ஆற்றியுள்ள எதிர்வினையும் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக குழு நேர்காணலின் போது, அர்ஜுன் ரெட்டி மற்றும் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான ஜோக்கர் ஆகியவையை ஒப்பிட்டுப் பேசினார் பார்வதி. “அர்ஜுன் ரெட்டி ஆகட்டும், அதன் இந்தி ரீமேக்கான கபிர் சிங் ஆகட்டும், இரண்டும் ஆண், ஆதிக்கம் செலுத்துவதை பெருமைபடுத்தும் விதத்தில் காட்டின. ஜோக்கர், ஹாலிவுட் திரைப்படத்திலும் வன்முறை இருந்தாலும், அது வெறுமனே நடந்தவையைக் காட்சிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. ஆனால், அர்ஜுன் ரெட்டியில் அப்படி இல்லை,” என்று தடாலடி கருத்தைத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “ஒரு சோகமான படத்தைப் பார்த்துவிட்டு, அதை திரையரங்கிலேயே விட்டுவிட்டு வர முடியும். அதே நேரத்தில் ஒரு ஆண் - பெண் உறவில், இருவரையும் அடித்துக் கொள்ளவில்லை என்றால், அதில் உயிர்ப்பு இல்லை என சொல்வது ஆபத்தானது. அது குறித்து மக்களும் பெருமையாக பேசுகிறார்கள். இது வன்முறையைத் தூண்டவல்லது. இதன் மூலம் பலருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நடிகர்களாக நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நடிகராக, ஒரு இயக்குநரை இதைப் போன்ற ஒரு காட்சியை எடுக்காதீர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தப் படத்திலிருந்து என்னால் விலகியிருக்க முடியும் அல்லவா,” என்றார்.
அதற்கு விஜய் தேவரகொண்டா, “அர்ஜுன் ரெட்டியில் நான் செய்த கதாபாத்திரம் சரியென்று என்னால் வாதிட முடியாது. ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு வகையைச் சேரும். சில உறவில் ஆணும் பெண்ணும் செல்லமாக அடித்துக் கொள்வது என்பது வேறு. அதே நேரத்தில் நான் குழந்தையாக இருந்தபோது, எனது தந்தை, என் அம்மாவை துன்புறுத்தியுள்ளார். அதைப் போன்ற ஒரு பின்புலத்துடன் வந்து, அர்ஜுன் ரெட்டி போல ஒரு படத்தைப் பார்த்தால் என்னை அது அச்சுறுத்துகிறது,” என்றார்.
முழு நேர்காணலையும் பார்க்க:
பார்வதியின், வெளிப்படையான கருத்துகளுக்கு நெட்டிசன்கள், பலமான வரவேற்பைக் கொடுத்திருந்தபோது, இந்த விவகாரம் தேவரகொண்டாவை பாதித்துள்ளது. அது குறித்து அவர், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “நான் எல்லாவற்றையும் புரிந்து கொள்வேன். அர்ஜுன் ரெட்டி குறித்து மக்கள் கேள்வியெழுப்பியபோது அதில் விஷயம் இருப்பதை உணர்ந்தேன். ஆனால், சிலருக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியவில்லை. பார்வதி கேட்ட கேள்வி வேறு. அவரை நான் மதிக்கிறேன். ஆனால், சமூக வலைதளங்களில் இது குறித்து எழுப்பப்படும் கேள்விகள் என்னை பாதிக்கின்றன. பைத்தியக்காரத்தனமாக உள்ளது,” என்று எரிச்சலுடன் பேசியுள்ளார்.