This Article is From Aug 06, 2018

சிறுமிகளை இரவில் ஏற்றிச் சென்ற கார்கள்: தப்பித்த சிறுமியின் திடுக் தகவல்

பாலியல் துன்புறுத்தல், கொடுமைப்படுத்தல் எனப் புகார் எழுந்ததையடுத்து, தேவரியா மாவட்டத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் 24 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்

ஹைலைட்ஸ்

  • மீட்கப்பட்ட சிறுமிகள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர்
  • 2017 வரை இத்தனியார் காப்பகம் அரசிடம் நிதி பெற்று வந்துள்ளது
  • சிபிஐ முறைகேடுகளை கண்டுபிடித்ததை அடுத்து நிதி உதவி ரத்து செய்யப்பட்டது
Deoria, Uttar Pradesh:

பாலியல் துன்புறுத்தல், கொடுமைப்படுத்தல் எனப் புகார் எழுந்ததையடுத்து, உத்தர பிரதேச மாநிலத்தின் தேவரியா (தியோரியா) மாவட்டத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் இருந்து 24 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் பதினைந்து சிறுமிகளைக் காணவில்லை. காப்பகத்தை நடத்தி வந்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இக்காப்பகத்தில் இருந்து தப்பித்த பத்து வயது சிறுமி போலீசாரிடம் “சிவப்பு, வெள்ளை, கருப்பு நிறங்களில் கார்கள் இரவில் வந்து சிறுமிகளை ஏற்றிச் செல்லும். திரும்ப காலையில் கொண்டு வந்து விடும்” என்று தெரிவித்ததை அடுத்து இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காவல்துறையினர் நேற்று இரவு அவ்விடுதியில் ரெய்டு நடத்தி அங்கிருந்த சிறுமிகளை மீட்டனர். போலிசார் கிரிஜா திரிபாதி, அவர் கணவர் மோகன் திரிபாதி மற்றும் இவர்களது மகள் ஆகியோரைக் கைதுசெய்து, காப்பகத்துக்கு சீல் வைத்தனர்.

“சிறுமிகளை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவர்களது வாக்குமூலம் மாஜிஸ்டிரேட் முன்னிலையில் பதிவு செய்யப்படும். பெண்கள் & குழந்தைகள் வளர்ச்சித் துறையினரும் உதவி வருகின்றனர். சட்டப்படி இதில் விசாரணை மேற்கொள்ளப்படும்” என கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு) ஆனந்த் குமார் தெரிவித்தார்.

உ.பி. தலைநகர் லக்னோவில் இருந்து 300கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்தனியார் காப்பகம் 2017 வரை அரசிடம் நிதியுதவி பெற்று வந்தது. அதன்பின்னர் தேசிய அளவில் சிபிஐ மேற்கொண்ட ஆய்வின்போது முறைகேடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டதால் அது ரத்து செய்யப்பட்டது.

எனினும் உரிய அனுமதி இன்றி கைது செய்யப்பட்ட தம்பதியினர் காப்பகத்தைத் தொடர்ந்து நடத்திவந்துள்ளனர். சென்ற வாரம், விடுதியை ஆய்வு செய்யச் சென்ற காவல்துறையினரிடம் தவறாக நடந்துகொண்டதோடு திருப்பி அனுப்பியுள்ளனர். இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு, காப்பகத்தில் இருந்து தப்பித்த ஒரு சிறுமியை, உள்ளூர்க்காரர்கள் போலிசிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது அவர், 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுமிகள் உடலுறவில் ஈடுபடுமாறு வற்புறுத்தப்படுவதாகவும், வேலைக்காரர்களாக நடத்தப்படுவதாகவும், காப்பகத்தை நடத்தும் தம்பதிகள் செய்யும் கொடுமைகளைக் கூறினார்.

“கடந்த மூன்று ஆண்டுகளாக இச்சிறுமி அக்காப்பகத்தில் இருந்து வருகிறாள். அச்சிறுமியை அவர்களின் வேலைக்காரியாக நடத்தியுள்ளார்கள். இரவில் கார்களில் பல பெண்கள் ஏற்றிச் செல்லப்பட்டு காலையில் இறக்கி விடப்பட்டுள்ளனர். திரும்பி வந்ததும் அவர்கள் நாள்முழுதும் அழுதபடி இருந்துள்ளனர். சட்டவிரோதமாக தத்தெடுப்பதும் அங்கு நடந்து வந்திருக்கிறது. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் காணாமல் போன சிறுமிகளையும் தேடி வருகிறோம்” என காவல்துறை கண்காணிப்பாளர் ரோகன் தெரிவித்தார்.

“இது முற்றிலும் சட்டவிரோதமாக இயங்கி வந்த காப்பகம் ஆகும். இதன் உரிமம் எப்போதோ ரத்து ஆகிவிட்டது. சிபிஐ ஆய்வினை அடுத்து இதனை மூடவும் உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருவாரங்களுக்கு முன்பு முதல் தகவல் அறிக்கை ஒன்று பதியப்பட்டு சிறுமிகளை அரசு விடுதிகளுக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டது. கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உத்தர பிரதேச பெண்கள் & குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரீட்ட பஹுகுணா தெரிவித்துள்ளார்.

இக்காப்பகத்தின் அருகே கடை நடத்தி வரும் மனோஜ் குமார் கூறுகையில் “பெண் போலிசார் இங்கிருக்கும் சிறுமிகளை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டி வருவதைப் பார்த்துள்ளேன். பல திருமணங்களையும் இக்காப்பகம் ஒன்றாக நடத்துவது வழக்கம். தத்தெடுப்பதற்கு தம்பதியினருக்கு உதவி வந்தார்கள். அண்மையில் கூட பிரான்சை சேர்ந்த தம்பதியினர் இரு பெண்களைத் தத்தெடுத்தார்கள். ஆனால் இங்கு வேறு செயல்களும் நடக்கின்றன எனக்கு தெரியாமல் இருந்தது” என்றார்.

இச்சம்பவத்தையடுத்து மாவட்ட மாஜிஸ்டிரேட் சுஜீத் குமார் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தும் இதில் சிபிஐ விசாரணை கோரியும் வருகின்றனர். பகுஜன் சமாஜ் தலைவர் மாயவதி, பாஜ ஆளும் மாநிலங்களில் காட்டாட்சி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்புதான் பீகாரின் முசப்பர்புரில் உள்ள அரசுக் காப்பகத்தில் பெண்கள் வன்புணரப்பட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்து ஏழு வயது சிறுமி உள்ளிட்ட முப்பது சிறுமிகள் மீட்கப்பட்டனர். இதில் காப்பகத்தை நடத்த அரசால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர், அமைச்சர் ஒருவரின் கணவர் உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.