டெல்லி தேர்தலின் போது பல பாஜக நிர்வாகிகள் சர்ச்சையாக பேசினார்கள்.
ஹைலைட்ஸ்
- வெறுப்புப் பேச்சு தோல்விக்குக் காரணமாக இருக்கலாம்: அமித்ஷா
- சர்ச்சைப் பேச்சுகளுக்கு பாஜக பொறுப்பேற்கவில்லை
- பாஜகவின் 270 எம்பிக்கள், 70 அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்
New Delhi: நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மீண்டும் பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. அதே நேரத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருந்த பாஜக மொத்தம் இருந்த 70 இடங்களில் வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, டெல்லி தேர்தல் தோல்வி பற்றி முதன்முறையாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
“தேர்தலின்போது வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளை சொல்லியிருக்கக் கூடாது. பல கட்சி உறுப்பினர்கள் சொன்ன கருத்துகளை பாஜக ஏற்கவில்லை.
சிலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தாலும், நமது தொண்டர்களுக்கு நாம் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியும். இருப்பினும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு வாக்காளர், நமக்கு ஏன் வாக்கு செலுத்தவில்லை என்பதை எழுதிக் கொடுப்பது இல்லை. ஆனால், இது ஒரு காரணமாக இருக்கலாம்,” என்று டெல்லி தேர்தல் தோல்வி பற்றி விளக்கம் கொடுத்துள்ளார் அமித்ஷா.
பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 270 பேர், 70 மத்திய அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலரும் டெல்லியில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால், அப்படி செய்தும் அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. பலர் பரப்புரைகளின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தாலும், அது குறித்து பாஜக எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூட வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசி சிக்கினார். அவருக்கு எதிராகக் கூட பாஜக நடவடிக்கை எடுக்கவில்லை.
அமித்ஷா, டெல்லி தேர்தல் முடிவுகள் பற்றி மேலும் பேசுகையில், “நான், டெல்லி தேர்தலில் எங்கள் கட்சிப் பெரும்பான்மை பெற்றுவிடும் என்று ஸ்திரமாக நம்பினேன். அதைச் சொல்வதில் எனக்குக் கவலை இல்ல… பல முறை என் கணிப்பு சரியானதாகவே இருந்திருக்கின்றது. இந்த முறை அப்படியில்லை. கட்சியின் தோல்விக்குக் காரணம் என்ன என்பது பற்றி ஆலோசனை செய்துள்ளோம்,” என்று கூறினார்.
பாஜகவின் தோல்வியை ஆம் ஆத்மி மற்றும் பிற எதிர்க்கட்சிகள், ‘பாஜகவின் உத்திக்குக் கிடைத்த தோல்வி' என்று விமர்சித்துள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளையும் பிரிவினை அரசியலையும் கையாளுபவர்கள் இந்த முடிவுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். யார் சொன்னதைச் செய்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி,” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி தேர்தலின் போது பல பாஜக நிர்வாகிகள் சர்ச்சையாக பேசினார்கள். ஆனால் அமைச்சர் அனுராக் தாக்கூல், சிஏஏ சட்டத்துக்கு எதிராக வீரியமாக போராட்டம் நடந்து வரும் ஷாகீன் பாக் பகுதியைப் பற்றி, “துரோகிகளை சுட்டுத் தள்ள வேண்டும்” எனப் பேசினார். அதை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.