This Article is From May 21, 2019

கருத்துக் கணிப்புகளை அடுத்து ஓரணியில் எதிர்க்கட்சிகள்; தேர்தல் ஆணையத்தை சந்திக்க திட்டம்!

எதிர்க்கட்சிகள், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே டெல்லியில் சந்திக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

2017 உத்தர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரும், இ.வி.எம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

ஹைலைட்ஸ்

  • 21 எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தை சந்திக்க உள்ளன
  • இ.வி.எம் குறித்து அவர்கள் புகார் அளிக்க உள்ளனர்
  • தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக வெற்றி பெறும் என்றுள்ளன
New Delhi:

21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள், இந்திய தேர்தல் ஆணையத்தை சந்தித்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (இ.வி.எம்) மற்றும் விவிபிஏடி வாக்குச் சீட்டு இயந்திரம் ஆகியவை குறித்து தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தெரிவிக்க உள்ளனர். 

2019 தேர்தலில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எளிமையான வெற்றி கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் யூகித்துள்ளதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. கருத்துக் கணிப்புகளில், எதிர்க்கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதான பிராந்தியக் கட்சிகள், இந்தத் தேர்தலில் சறுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக-வுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் 122 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்று 13 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மூலம் அறிய முடிகிறது. 

பல எதிர்க்கட்சிகள், கருத்துக் கணிப்புகள், பல முறை பொய்த்துப் போகும் என்று கூறியுள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இ.வி.எம் முறைகேட்டில் ஈடுபட இது ஒரு திட்டம்” என்று விமர்சித்துள்ளார். 

சந்திரபாபு நாயுடு, “தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒழுங்கான முறையில் நடைபெறுகிறதா என்பதை தேர்தல் ஆணையம் ஊர்ஜிதப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 

கர்நாடக முதல்வர் குமாரசாமி, “அனைத்து எதிர்க்கட்சிகளும் இ.வி.எம் இயந்திரங்களின் நம்பகத்தன்மை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து கேள்வி எழுப்பியுள்ளன. இந்தப் பிரச்னையை சமாளிக்க உச்ச நீதிமன்ற கதவுகளைக் கூடத் தட்டியுள்ளன எதிர்க்கட்சிகள்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார். 
 

2017 உத்தர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரும், இ.வி.எம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். மாயாவதி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால், பழையபடி வாக்குப் பெட்டி முறைக்கே மாற வேண்டும் என்று கூட கோரிக்கை வைத்தனர். 

‘எப்போதெல்லாம் தேர்தலில் தோல்வியடைகிறார்களோ, அப்போதெல்லாம் இ.வி.எம் இயந்திரங்களை குறை சொல்கின்றன அரசியல் கட்சிகள்' என்று சொல்லி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது தேர்தல் ஆணையம். 

எதிர்க்கட்சிகள், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே டெல்லியில் சந்திக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதி ஆகியோர் அறிவித்ததைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு சந்திப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

.