This Article is From Sep 22, 2018

ரஃபேல் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபரின் பகீர் கருத்து; பிரான்ஸ் அரசு விளக்கம்!

ஹாலண்டேவும் அந்நாட்டில் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். பிரான்ஸ் நாட்டிலும் ரஃபேல் விவகாரம் பூதாகரமாகியுள்ளது

ரஃபேல் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபரின் பகீர் கருத்து; பிரான்ஸ் அரசு விளக்கம்!

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து காங்கிரஸ், மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறது

New Delhi:

ரஃபேல் (Rafale) ஒப்பந்த விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலாண்டே (Francois Hollande), ‘ரஃபேல் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை இந்திய அரசு, அனில் அம்பானியின் (Anil Ambani) நிறுவத்துடன் மட்டும் தான் கூட்டு சேர்ந்து பணிகள் செய்யச் சொன்னது. எங்களுக்கு வேறு எந்த நிறுவனம் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை’ என்று பகீர் கருத்து கூறினார். இது பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் பிரான்ஸ் அரசு, அவர் கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளது. 

பிரான்ஸ் அரசு, ‘இந்த ஒப்பந்தத்தில் எந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து பிரான்ஸ் அரசுக்கு உரிமை இருக்கவில்லை. தரமான விமானத்தை கொடுக்க வேண்டும் என்பது மட்டும் தான் எங்கள் நோக்கம்’ என்று கூறியுள்ளது.

இது குறித்து 10 முக்கிய தகவல்கள்:

1.டசால்ட் ஏவியேஷன் வெளியிட்ட அறிக்கையில், ‘2016 ஆம் ஆண்டு டிபிபி நடைமுறைப்படி ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டது. மேக் இன் இந்தியா கொள்கை மூலம் டசால்ட் ஏவியேஷன், இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தது. இது டசால்டு ஏவியேஷன் நிறுவனத்தின் தேர்வு தான்’ என்று குறிப்பிட்டுள்ளது. 

2.பிரான்ஸ் அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த ஒப்பந்தப்படி, பிரான்ஸ் நாட்டின் நிறுவனம், இந்தியாவின் எந்த நிறுவனத்துடனும் சேர்ந்து பணி செய்ய முடிவெடுக்கலாம். அதற்கு பின்னர், எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடலாம் என்பது குறித்து இந்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

3.ரஃபேல் விவகாரம் குறித்து பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலண்டே, ‘ரஃபேல் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை எந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து தேர்வு செய்யும் உரிமை எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இந்திய அரசு, சொன்னதற்கு ஏற்ப டசால்ட் ஏவியேஷன் நிறுவனம், அம்பானி குழுமத்துடன் இணைந்தது. இந்திய அரசு எங்களுக்கு சிபாரிசு செய்த நிறுவனத்துடன் நாங்கள் ஒப்பந்தம் போட்டோம்’ என்று கூறினார். 

4.ஹாலண்டேவின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ராணுவத் துறை செயலர், ‘பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறியுள்ள கருத்து குறித்து ஆராயப்படும். இந்திய அரசோ பிரான்ஸ் அரசோ இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று ட்வீட்டியுள்ளார்.

5.ஹாலண்டேவின் கருத்தை அடுத்து, எதிர்கட்சிகள் ரஃபேல் விவகாரம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்திலும் இந்த விவகாரம் எதிரொலிக்கும் எனப்படுகிறது.

6.அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், ரஃபேல் விமானங்களுக்கு பாகங்களை செய்ய உள்ளது. 30,000 கோடி ரூபாய் அளவிலான வியாபார ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் குழுமம் ஈடுபடும் எனத் தெரிகிறது. 

7. ‘பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்கு துரோகம் இழைத்துள்ளார். நம் ராணுவ வீரர்களின் ரத்தத்துக்கு அவர் மதிப்பளிக்கவில்லை’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

8.அனில் அம்பானி கடந்த டிசம்பர் மாதம் 2 பக்க விளக்க கடிதத்தை ராகுல் காந்திக்கு எழுதினார். அதில், ‘எங்கள் நிறுவனத்துக்கு ரஃபேல் ஒப்பந்தத்தில் திறம்பட செயல்பட அனைத்து வித அனுபவமும் இருக்கிறது’ என்று தெரிவித்தார். 

9.ரஃபேல் தவிர மற்ற பிரான்ஸ் நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டு உள்ளன. 

10.ஹாலண்டேவும் அந்நாட்டில் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். பிரான்ஸ் நாட்டிலும் ரஃபேல் விவகாரம் பூதாகரமாகியுள்ளது.  

.