சேலத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒருபகுதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் நல்ல தீர்ப்பு வந்தவுடன் 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும்.
எந்த ஒரு தனி நபருக்காவும் 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படவில்லை, உலகத்தரத்திற்கு ஏற்ப சாலைகளை அமைக்கவே மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்தது.
8 வழிச்சாலை என்பது மாநில அரசின் திட்டமல்ல, அது மத்திய அரசின் திட்டம், மக்களின் உயிர் சேதத்தை தவிர்க்க, பொருள் சேதத்தை தவிர்க்க, விபத்தை தவிர்க்க, எரிபொருளை மிச்சப்படுத்த, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலே இந்த திட்டத்தை துவக்கியுள்ளோம்.
யாருடைய நிலத்தைப் பறித்தும் அரசு திட்டத்தை நிறைவேற்றாது. எதிர்ப்பு தெரிவிப்பவர்களை சமாதானப்படுத்தியே திட்டம் நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சேலத்திற்கு அருகே 60 ஏக்கர் பரப்பளவில் பஸ் போர்ட் அமைக்கப்படும். தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சேலம் முதல் செங்கப்பள்ளி வரை தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த திறப்பு விழாவில் திமுக எம்.பி. பார்த்திபன், திமுக எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். எனினும், உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தே அவசர கதியில் பாலம் திறக்கப்பட்டதாக திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் குற்றம்சாட்டினார்.