அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
New Delhi: காலணியை கழற்ற சொன்ன விவகாரத்தில், சிறுவனிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர் சிறுவனின் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை முகாமில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது, பூஜையில் பங்கேற்க கோயிலுக்குள் செல்வதற்காக தன்னுடைய காலணிகளை பழங்குடியின சிறுவர்களை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கழற்றி விடும் படி கூறினார்.
இந்த சம்பவம் குறித்து வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து, சிறுவனை ஒருமையில் அழைத்து தனது காலணிகளை அமைச்சர் கழற்ற வைத்ததாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, 14 வயதான அந்த சிறுவன் தரப்பில், தான் "அவமானப்படுத்தப்பட்டதாக" உணர்ந்ததாகவும், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வெளியான அந்த வீடியோவில், மாவட்ட ஆட்சியர், உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடந்து வரும் அமைச்சர் சிறுவர்களை வேகமாக வரும்படி அழைக்கிறார். தொடர்ந்து, தனது காலணியின் பக்கிலை கழட்டி விடும்படி கூறுகிறார். அதனை அந்த சிறுவனும் அப்படியே செய்கிறான்.
இதனை வீடியோவாக எடுக்க விடாமல் அமைச்சரின் ஆட்கள் சிலர் மறைத்து நிற்கின்றனர்.
சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய இந்த வீடியோவை தொடர்ந்து பலரும் அமைச்சரை கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும், அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், காலணியை கழற்ற சொன்ன சிறுவனை குடும்பத்தோடு அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஊட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறுவன் மற்றும் அவரது பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.