This Article is From Jun 01, 2018

தொடர்ந்து வலுத்த எதிர்ப்பு… வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்!

கடந்த புதன் கிழமை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காயம் அடைந்தவர்களை சந்திக்கச் சென்றார் ரஜினிகாந்த்

தொடர்ந்து வலுத்த எதிர்ப்பு… வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்!

ஸ்டெர்லைட் ஆலையில் சமூக விரோதிகள் ஊடுருவினர் என்று ரஜினி கூறியிருந்தார்

ஹைலைட்ஸ்

  • யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றுள்ளார் ரஜினி
  • போலீஸுக்கு ஆதரவான கருத்தை அவர் கூறியிருந்தார்
  • ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் இறந்துள்ளனர்
Chennai:

கடந்த புதன் கிழமை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காயம் அடைந்தவர்களை சந்திக்கச் சென்றார் ரஜினிகாந்த். பயண முடிவில் பத்திரிகையாளர்கள் சந்தித்தார் ரஜினி. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோபமடைந்து பாதியிலியே புறப்பட்டு விட்டார்.

 

இந்த விஷயம் குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தற்போது அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

 

தூத்துக்குடியில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த போராட்டம், அதன் 100-வது நாளில் தீவிரமடைந்தது. 100-வது நாளன்று அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று கருதி தூத்துக்குடி ஆட்சியர், 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இருந்தும் மக்கள் அறவழியில் போராடுவோம் என்று கூறினர். 100-வது நாளன்று ஊர்வலமாகச் சென்று கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் போராடும் மக்களுக்கும் இடையில் மோதல் உண்டானது. மக்கள் கூட்டத்தைக் கலைக்க, போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதனால், ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த நாளும் துப்பாக்கி சூடு நடத்தியது போலீஸ். இதனால், மொத்தம் 13 பேர் பலியாகினர். 

 

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்தனர். 

 

இந்நிலையில், கடந்த புதன் கிழமை நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு பயணம் செய்து போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். காயமடைந்தவர்களைப் பார்த்து முடித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், `தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் போராட்டத்தின் திசை மாறியது. எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டில் போராட்டம் செய்யக் கூடாது. அப்படி செய்தால், தமிழ்நாடே சுடுகாடாக மாறிவிடும்' என்று கூறியவரிடம் செய்தியாளர் ஒருவர், `பின்னர் உரிமைக்காக எப்படி குரல் கொடுப்பது' என்று கேட்டார். அதற்கு ரஜினிகாந்த் கோபமடைந்து, `போலீஸ்காரர்களை தாக்கும் எந்தப் போராட்டத்தையும் நான் ஆதரிக்க மாட்டேன். போலீஸாரை தாக்கிய பின்னர் தான், அவர்களும் தாக்கினர். நன்றி' என்று கூறிவிட்டு பாதியிலேயே கோபமாக சென்றுவிட்டார். 

 

இதையடுத்து பத்திரிபகையாளர்களை ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தது. இதற்கு வருத்தம் தெரிவித்த ரஜினி, `யாரையும் புண்படுத்தும் எண்ணம் கனக்கில்லை. அப்படி எந்த பத்திரிகை அன்பர்களது மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்' என்று ட்விட்டர் மூலம் தெரிவித்தார். 


 

.