This Article is From May 03, 2019

‘புரிக்கு பின்னர் புவனேஷ்வர்!’- ஃபனியின் அடுத்த டார்கெட் பற்றி ‘தமிழ்நாடு வெதர்மேன்’

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் வீசும் பகுதியில் இருந்த 11 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

‘புரிக்கு பின்னர் புவனேஷ்வர்!’- ஃபனியின் அடுத்த டார்கெட் பற்றி ‘தமிழ்நாடு வெதர்மேன்’

ஃபனி புயலினால், புரியில் கனமழை பெய்து வருவதாகவும், பல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இன்று காலை ஒடிசாவின் புரியில் கரையை கடக்க ஆரம்பித்தது ஃபனி புயல். காலை 8 மணி முதல் புரியில், ஃபனி புயல் கரையை கடந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான், ஃபனி குறித்த அப்டேட் கொடுத்துள்ளார்.

வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்படி, ‘ஒடிசா கடற்கரையை 150 முதல் 175 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து வருகிறது ஃபனி. சில இடங்களில் காற்றின் வேகம் இன்னும் அதிகமாக இருக்கிறது. புயலின் மையத்தின் சுற்றளவு 30 கிலோ மீட்டராகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபனி புயலினால், புரியில் கனமழை பெய்து வருவதாகவும், பல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் வீசும் பகுதியில் இருந்த 11 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒடிசா கடற்கரை மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. 

1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் புயலாக உருவெடுத்துள்ளது ஃபனி. ஒடிசாவில் இன்று ஃபனி புயல் கரையை கடந்து வருவதால், அம்மாநிலத்தில் கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டவை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

ஃபனி புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ‘புரிக்குப் பின்னர் புவனேஷ்வரையும், அதன் பின்னர் கட்டக்கையும் தாக்க உள்ளது ஃபனி புயல். ஃபனி புயல் சில மணி நேரங்களிலேயே 200 முதல் 300 மில்லி மீட்டர் வரை மழை பொழிய வாய்ப்புள்ளது. ஃபனியின் வெளிப்புறம், கொல்கத்தாவை அடையும். 

புரியில் 180 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 3 நிமிடங்களுக்கு புயல் காற்று வீசியிருக்கும். 

தமிழகத்தில் கடந்த 3 புயல்களின் வேகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் இதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளலாம். 

தானே புயல் 2011 (கடலூர்)- 140 கி.மீ வேகம்

கஜா புயல் 2018 (வேதாரண்யம்)- 130 கி.மீ வேகம்

வர்தா புயல் 2016 (சென்னை)- 120 கி.மீ வேகம்' என்று கூறியுள்ளார். 

.