This Article is From Dec 15, 2019

Savarkar பற்றி ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு; உஷ்ணமான சிவசேனா… அடுத்து என்ன?

“என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல. நான் ராகுல் காந்தி. உண்மையைப் பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் - Rahul Gandhi

Savarkar பற்றி ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு; உஷ்ணமான சிவசேனா… அடுத்து என்ன?

Rahul Gandhi - 'நரேந்திர மோடியும் அவரது அசிஸ்டென்ட் ஆன அமித்ஷாவும்தான் இந்தியப் பொருளாதாரத்தை அழித்தமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்'

ஹைலைட்ஸ்

  • Rahul Gandhi, பாரத் பசாவ் நிகழ்ச்சியில் சாவர்க்கர் குறித்து பேசினார்
  • சிவசேனா, காங்கிரஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
  • சாவர்க்கர் ஒரு கடவுள் - சிவசேனா
Mumbai:

Rahul on Savarkar - காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி (Rahul Gandhi), டெல்லியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில், இந்துத்துவத்தின் முன்னோடியான வீர் சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது வலதுசாரி இயக்கங்களுக்கு மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ள இந்துத்துவ கொள்கைகள் கொண்ட சிவசேனா (Shiv Sena), ராகுலின் பேச்சுக்குக் கடும் ஆட்சேபனைத் தெரிவித்துள்ளது. 

டெல்லியில், ‘பாரத் பசாவ்' என்கிற பேரணியில் பேசினார் ராகுல். முன்னதாக அவர் ஜார்கண்ட் பொதுக் கூட்டத்தில், “பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா' என்கிறார். ஆனால், இங்கு நடப்பதோ ‘ரேப் இன் இந்தியா'-வாக இருக்கிறது,” என்று தடாலடியாக பேசினார். இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த பாஜக எம்பிக்கள், நாடாளுமன்றத்தில், “ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று வலியுறுத்தினர். இது பற்றி பாரத் பசாவ் பேரணியில் பேசிய ராகுல், “என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல. நான் ராகுல் காந்தி. உண்மையைப் பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். எந்த காங்கிரஸ்காரனும் கேட்க மாட்டான். நரேந்திர மோடியும் அவரது அசிஸ்டென்ட் ஆன அமித்ஷாவும்தான் இந்தியப் பொருளாதாரத்தை அழித்தமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று அதிரடியாக உரையாற்றினார். 

இதைத் தொடர்ந்து சிவசேனா, “நாங்கள் பண்டிதர் நேருவையும் மகாத்மா காந்தியையும் மதிக்கின்றோம். ஆகையால் நீங்கள் வீர் சாவர்க்கரை அவமதிக்கக் கூடாது,” என்று கூறியுள்ளது. அக்கட்சியின் மூத்த நிர்வாகி சஞ்சய் ராவத், இந்தக் கருத்தை ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார். 

அவர் மேலும், “வீர் சாவர்க்கர் ஒரு கடவுள். மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல, மொத்த நாட்டுக்கும். தேசியப் பெருமைக்கும் சுயமரியாதைக்கும் பெயர் போனவர் சாவர்க்கர். நேருவையும் காந்தியையும் போல, அவரும் சுதந்திரத்துக்காக தனது வாழ்க்கையைத் தியாகம் செய்தார். அப்படிப்பட்ட அனைத்துக் கடவுள்களும் மதிக்கப்பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,” என்று கூறினார். 

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் 35 ஆண்டுகள் கூட்டணியிலிருந்த சிவசேனா, அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கூட்டணியை முறித்தது. தொடர்ந்து நேரெதிர் கொள்கைகள் கொண்ட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கை கோர்த்து ஆட்சி அரியணையில் ஏறியது சேனா. அக்கட்சியின் உத்தவ் தாக்கரே, முதன்முறையாக மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பேற்றார். 

முன்னதாக ‘குடியுரிமை திருத்த மசோதா', லோக்சபாவில் தாக்கல் ஆன போது, அதற்கு ஆதரவாக வாக்களித்தது சேனா. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, ராஜ்யசபாவில் மசோதாவுக்கு வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது சிவசேனா. இப்படி கொள்கை முரணால் இரு கட்சிகளுக்கும் உரசல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 

குடியுரிமை மசோதா, லோக்சபாவில் ஒப்புதல் பெற்ற பிறகு ராகுல், “இந்த மசோதா இந்திய சட்டசாசனத்தின் மீது ஏற்பட்டுள்ள தாக்குதல். இந்த மசோதாவை யார் ஆதரித்தாலும் அவர்கள் நம் நாட்டின் அடிக்கட்டுமானத்தை அழிப்பதாகவே பார்க்க முடியும்,” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

.