ஜம்மு-காஷ்மீரில் ஆப்பிள்களை அரசே கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு பணத்தை அளிக்கலாம் என கிஷான் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Hyderabad: சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை ரத்து செய்ததன் மூலம், ஒரே நாடு ஒரே அரசியலமைப்பு சட்டம் என்ற அம்பேத்கரின் கனவு தற்போது நிறைவேறியுள்ளது என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டி, அம்பேத்கரால் இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டம் ஜம்மு-காஷ்மீரில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை ரத்து செய்ததன் மூலம், ஒரே நாடு ஒரே அரசியலமைப்பு சட்டம் என்ற அம்பேத்கரின் கனவு தற்போது நிறைவேறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எஸ்.சி, எஸ்.டி, பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு பொருந்தாது. அதேபோல், தகவல் அறியும் உரிமைச் சட்டமும் அங்கு பொருந்ததாது.
சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு முன்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஆப்பிள் சந்தை, விவசாயிகளுக்கு போதுமான லாபத்தை வழங்கியது இல்லை. விற்பனையாளர்கள் கொள்முதல் தொகையிலிருந்து 70 சதவீதத்தை எடுத்துக்கொண்டு விவசாயிகளுக்கு வெறும் 30 சதவீதத்தை மட்டுமே வழங்கி வந்தனர்.
ஆனால், தற்போது ஒவ்வொரு ஆப்பிளையும் அரசே கொள்முதல் செய்து, அதன் உண்மையான தொகையை விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.