This Article is From Aug 06, 2018

உ.பி குழந்தை காப்பகத்திலிருந்து தப்பித்த பெண், போலீஸில் புகார்: இருவர் கைது!

உத்தர பிரதேச மாநில டியோரியாவில் இருக்கும் ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது

Deoria:

உத்தர பிரதேச மாநில டியோரியாவில் இருக்கும் ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த காப்பகத்திலிருந்து தப்பித்து வந்தப் பெண், போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து, அந்த காப்பகத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்த பெண் மற்றும் அவரது கணவர், தப்பித்து வந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள். காப்பகத்தை சிபிஐ சில நாட்களுக்கு முன்னர் சோதனையிட்டது. அதன் பின்னர், காப்பகத்துக்கான உரிமத்தை புதுபிக்க முடியாது என்று ஆணையிடப்பட்டது.

தப்பித்து வந்தப் பெண், காப்பகத்தில் பெண்கள் வேலை ஆட்கள் போல நடத்தப்படுவதாக காவல்துறையிடம் புகார் தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது.

இந்த கைது நடவடிக்கை குறித்து எஸ்.பி ரோகன் பி.கன்யே, ‘காப்பகத்தை மூடக் கோரி எங்களுக்கு உத்தரவு வந்த பிறகு, எங்கள் தரப்பு ஆட்கள் அங்கு சென்றனர். அப்போது, எங்களை அவர்கள் தரைகுறைவாக நடத்தினர். ஆனால், அங்கிருந்து தப்பித்து வந்தப் பெண் எங்களுக்கு அளித்த புகாரில், அந்த இடத்தின் உண்மை நிலை குறித்து அறிய முடிந்தது. பல தகவல்கள் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 24 பெண்கள் காப்பகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்’ என்று தகவல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. 

இதைப் போன்ற ஒரு சம்பவம் பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் கடந்த மாதம் நடந்தது. அங்கிருந்த குழந்தைகள் காப்பகத்திலிருந்த பெண்களை, காப்பகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸ் காப்பகத்தை சோதனையிட்டு 44 பெண்களை மீட்டது. 

அடுத்தடுத்து இதைப் போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் உத்தர பிரதேசத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. 

.