This Article is From Sep 14, 2019

UP: 'டிராஃபிக் விதிமீறியவரை' நடுரோட்டில் புரட்டியெடுத்த 2 போலீஸ் மீது கொலை முயற்சி வழக்கு!

பாதிக்கப்பட்ட நபர், சாலை விதிமீறலில் ஈடுபட்ட பின்னர் போலீஸாருடன் வாக்குவாதம் செய்துள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் நடக்கும்போது பாதிக்கப்பட்ட நபரின் சிறு வயது உறவினப் பெண்ணும் உடனிருந்தார்

Lucknow:

உத்தர பிரதேச மாநிலத்தின் சித்தார்த் நகரில், சில நாட்களுக்கு முன்னர் 2 காவலர்கள் ஒரு நபரை நடுரோட்டில் அடித்து துவைத்த வீடியோ வைரலானது. நேபாலுக்கு அருகிலுள்ள உத்தர பிரதேச எல்லையையொட்டியுள்ள பகுதியில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 காவலர்கள் மீது தற்போது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் நடக்கும்போது பாதிக்கப்பட்ட நபரின் சிறு வயது உறவினப் பெண்ணும் உடனிருந்தார். 2 போலீஸார் தாக்கியபோது செய்வதறியாமல் அதிர்ச்சில் உறைந்திருந்தார் அந்தச் சிறுமி. அவரையும் வீடியோவில் பார்க்க முடியும். 

பாதிக்கப்பட்ட நபர், சாலை விதிமீறலில் ஈடுபட்ட பின்னர் போலீஸாருடன் வாக்குவாதம் செய்துள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் போலீஸ் தரப்பு, பாதிக்கப்பட்ட நபர் மது அருந்திருந்தார் என்றும் சமூக ரீதியிலான பிரச்னைக்கு வித்திட்டவர் என்றும் குற்றம் சாட்டுகிறது. அவரிடம் மது அருந்தியதற்கான சோதனை நடத்தப்படவில்லை. 

ரிங்கு பாண்டே என்னும் நபர் கடந்த செவ்வாய் கிழமை, போலீஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும், அதன் காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீடியோவில் துணை ஆய்வாளர் விரேந்திர மிஷ்ரா மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் மகேந்திர பிரசாத் ஆகியோர் பாண்டேவை தாக்குவதும் கண்டபடி திட்டுவதும் தெளிவாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் போலீஸாரில் ஒருவர், பாண்டே மீது அமர்ந்தும், தலை முடியைப் பிடித்து இழுத்தும் துன்புறுத்துகின்றனர்.  

பாண்டேவுடன் வந்திருந்த சிறுமிக்கும் இந்த சம்பவத்தால் காயம் ஏற்பட்டுள்ளது.

தாக்கப்படும்போது பாண்டே, “இது என் பிழைதான். வேண்டுமென்றால் சிறையில் அடைத்துக் கொள்ளுங்கள்” என்று இந்தியில் கத்தியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி தர்ம் வீர் சிங், “பாதிக்கப்பட்ட நபர் மது போதையில் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. 2 காவலர்களும் அந்த நபரிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளனர். இருவரும் காவல் சீறுடையில் வேறு இருந்துள்ளனர். இந்த சம்பவமானது போலீஸ் துறைக்கே அவமானகரமானது” என்று பேசியுள்ளார். 

.