காங்கிரசில் இணைந்த நிகழ்ச்சியில் மதுகோடா, அவரது மனைவி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்.
Ranchi: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது மனைவில் காங்கிரசில் சேர்ந்த நிலையில், தற்போது மதுகோடாவும் இணைந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி தலைநகர் ராஞ்சியில் காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார் முன்னிலையில் நடைபெற்றது. ஜார்க்கண்ட் முதல்வராக 2006-2008 வரை அவர் பொறுப்பில் இருந்தபோது, சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
பீகார் மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்தபோது ஜெகனாத்பூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ-வாக மதுகோடா தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பின்னாளில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். 2005-ம் ஆண்டின்போது பாஜகவை விட்டு விலகிய அவர், சுயேட்சையாக போட்டியிட்டு ஜெகனாத்பூரில் வெற்றி பெற்றார்.
2006-ல் நாட்டிலேயே 3-வது சுயேட்சை முதல்வராக பொறுப்பேற்று வரலாறு படைத்தார் மதுகோடா மீது சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 31-ம்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் காங்கிரசில் சேர்ந்துள்ளார்.
கடந்த மாதம் 11-ம்தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் மதுகோடாவின் மனைவி கீதா கோடா காங்கிரசில் இணைந்தார்.