இந்த ஆண்டு அக்னி நட்சத்திரக் காலம் மே 3-ஆம் தேதி தொடங்கியது. அதன் பிறகு, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. பல மாவட்டங்களில் அனல் காற்று வீசியது. இதனால் கடந்த ஒரு மாதமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், அக்னி நட்சத்திரக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதன்பிறகு, வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று 16 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் தலா 112 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதுதவிர வேலூர், திருச்சி, மதுரை, கரூர் உள்ளிட்ட இடங்களிலும் வெயில் சதமடித்தது.
இதைத்தொடர்ந்து, இன்று தமிழகத்தில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் பல இடங்களில் நேற்று வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சில இடங்களில் அனல் காற்று வீசியது. தொடர்ந்து, இன்றும் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் அனல் காற்று வீசும் என்றும் 3 நாட்களுக்கு இயல்பைவிட 6 டிகிரி வெயில் கூடுதலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
தென் வங்கக் கடலில் பெரும்பாலான பகுதிகள், வடக்கு அந்தமான் கடல், அந்தமான் தீவுகள் ஆகிய பகுதிகளில் அடுத்த 72 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.