This Article is From May 30, 2019

அக்னி நட்சத்திரம் நிறைவு: முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை?

அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்ற நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில், முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்னி நட்சத்திரம் நிறைவு: முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை?

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரக் காலம் மே 3-ஆம் தேதி தொடங்கியது. அதன் பிறகு, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. பல மாவட்டங்களில் அனல் காற்று வீசியது. இதனால் கடந்த ஒரு மாதமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், அக்னி நட்சத்திரக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதன்பிறகு, வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, நேற்று அனல் காற்றுடன் கடும் வெயில் காணப்பட்டது. எனினும், மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வெப்பம் தனிந்து குளிர்ந்த நிலை நிலவி மக்களுக்கு ஆறுதலை தந்தது. 

இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மெதுவானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வேலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். 

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இங்கு அதிக பட்சமாக 38 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 2-வது வாரம் தொடங்கும். சில ஆண்டில் முன் கூட்டியே ஜூன் முதலிலேயே தென்மேற்கு பருவ மழை தொடங்கி விடும். அது போல தற்போது மழை பெய்து அணைகளுக்கு லேசாக தண்ணீர் வருவதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி நீர் கசிவு ஏற்பட்டு வருவதாலும், தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே ஜூன் முதலில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, தென்வங்கக் கடலில் பெரும்பாலான பகுதிகள், வடக்கு அந்தமான் கடல், அந்தமான் தீவுகள் ஆகிய பகுதிகளில் அடுத்த 72 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.


 

.