அமலாக்கத்துறை அதிகாரிகள் மைக்கேலை மேலும் 7 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
New Delhi: கடந்த 2010-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர். இதைத்தொடர்ந்து, கிறிஸ்டியனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, துபாயில் இருந்து விமானம் மூலம் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதன்பின், மைக்கேலிடம் விசாரிக்க அனுமதிக்குமாறு பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் சிபிஐ கோர்ட்டில் முறையீடு செய்தனர். இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கிறிஸ்டியன் மைக்கேலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 22-ம் தேதி அனுமதித்தது.
அந்த விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் நீதிமன்றத்தல் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து, பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் மைக்கேலை மேலும் 7 நாள் விசாரிக்க நீதிபதி அரவிந்த் குமார் அனுமதி அளித்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு இடையே வழக்கறிஞரை சந்திக்கும் அனுமதியை பெற்றுள்ள கிறிஸ்டியன் மைக்கேல், இந்த சலுகையை தவறாக பயன்படுத்துவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
குறிப்பாக, சோனியா காந்தி தொடர்பான அதிகாரிகளின் கேள்விகளை தவிர்ப்பது எப்படி? என்று துண்டு சீட்டு மூலம் தனது வழக்கறிஞரிடம் கிறிஸ்டியன் மைக்கேல் ஆலோசனை கேட்பதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.