New Delhi: இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் நடைபெற்ற முறைகேட்டில் சோனியா காந்தியை சிக்க வைக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில், ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் சோனியா காந்தியை சிக்கவைக்க தரகரை மத்திய அரசு பயன்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் தொடர்பான வழக்கில் இரண்டு தினங்களுக்கு முன், கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் கைது செய்யப்பட்டார். அவரிடம் வாக்குமூலம் பெறப்படும்போது, இதில் சோனியாகாந்தியின் பெயரையும் சொல்லசொன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ் சுக்லா குற்றம் சாட்டியுள்ளார்.