2010 அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு முந்தைய நிலவரத்தை மோடி குறிப்பிட்டுள்ளார்.
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி உரையான மன் கி பாத்தில், அயோத்தி வழக்கை குறிப்பிட்டு பேசியுள்ளார். அவர் தனது உரையில் சிவசேனா கட்சியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளதாக தெரிகிறது.
2010-ல் அயோத்தி பிரச்னை தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு, பல்வேறு சட்ட நடவடிக்கைகளை கடந்து தற்போது விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
விரைவில் அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அயோத்தி விவகாரத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி தனது மாதாந்திர மன் கி பாத் உரையில் பேசியுள்ளார்.
மோடி தனது உரையில் கூறியிருப்பதாவது-
2010-ல் அயோத்தி விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதற்கு முன்பாக அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
நாம் பக்குவப்பட்ட, நாகரிகமுள்ள சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். நம்முடைய பொறுப்பை நாம் உணர்ந்திருக்கிறோம்.
ஆனால் குறிப்பிட்ட சில அமைப்புகள் கடந்த 2010 செப்டம்பருக்கு முன்பாக பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிட்டு வந்தன. விளம்பரத்துக்காகவே இந்த நடவடிக்கைகளில் அவை ஈடுபட்டன.
ஆனால் தீர்ப்புக்கு பின்னர் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. இதற்காக இந்திய குடிமக்களுக்கும், சமூக அமைப்புகளுக்கும், அரசியல் கட்சிகள், ஞானிகள், அனைத்து மத தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்து அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று சிவசேனா கட்சி பேசி வந்தது. அதனைத்தான் மறைமுகமாக மோடி பேசியுள்ளார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.