This Article is From Jul 18, 2019

‘ராஜினாமாவை திரும்ப பெறுவேன்!’- புதிய புயலைக் கிளப்பும் கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ

2 வாரங்களுக்கு முன்னர் தங்களது பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் 15 பேர், மும்பையில் இருக்கும் சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர்.

சமீபத்தில் கூட்டணி அரசுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்

Bengaluru:

கர்நாடகத்தில் காங்கிரஸ் - மஜத தலைமையிலான அரசின் பெரும்பான்மையை சோதிக்கும் வகையில் இன்று, அம்மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. சமீபத்தில் கூட்டணி அரசுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதுவரை அவர்களது ராஜினாமா ஏற்கப்படவில்லை. இந்நிலையில், கூட்டணி அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அதிருப்தி எம்.எல்.ஏ-வான ராமலிங்க ரெட்டி, தனது ராஜினாமாவைத் திரும்ப பெற உள்ளதாக கூறியுள்ளார்.

“நான் சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பேன். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நான் அரசுக்கு சாதகமாக வாக்களிப்பேன். ஆளுங்கட்சி ஆதரவு எம்.எல்.ஏ-வாகவே தொடருவேன்” என்று ராமலிங்க ரெட்டி கூறி புயலைக் கிளப்பியுள்ளார். 

அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை, சட்டசபை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில், கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும். தற்போது காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசின் பலம் 118 ஆக உள்ளது. இது ராஜினாமாவால், 100 ஆக குறையும். சபையில் பெரும்பான்மை பெற 105 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலை உருவாகும். பாஜக சார்பில் கர்நாடக சட்டமன்றத்தில் 105 எம்.எல்.ஏ-க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2 சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவும் பாஜக-வுக்கு உள்ளது. இதனால் அக்கட்சியின் பலம் 107 ஆக உயரும். 

2 வாரங்களுக்கு முன்னர் தங்களது பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் 15 பேர், மும்பையில் இருக்கும் சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர். ஆனால் ராமலிங்க ரெட்டி மட்டும், பெங்களூருவிலேயே இருந்தார். அவரை மறுபடியும் கட்சிக்குள் இழுக்கும் வேலைகளை காங்கிரஸ் தொடர்ந்து செய்து வந்தது. 

ரெட்டி, இப்படி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாலும், பிற அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், தங்களது முடிவில் ஸ்திரமாக இருப்பதாகவே தெரிகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், “ஆளுங்கூட்டணி அரசுக்கு ஆதரவாக கர்நாடக சட்டசபை சபாநாயகர் செயல்படுகிறார். எங்களது ராஜினாமாவை அவர் ஏற்க மறுக்கிறார். அவர் ராஜினாமாவை ஏற்க உத்தரவிட வேண்டும்“ என்று வாதிட்டனர். ஆனால் இது குறித்து நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், “சபாநாயகர் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து உத்தரவிட முடியாது” என்று கூறிவிட்டது. 
 

PTI தகவல்களுடன்

.