This Article is From Jan 06, 2019

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?துணை முதல்வர் ஓபிஎஸ் பதில்

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு முறையாக வெளியான உடன் அதிமுக தனித்து போட்டியிடுமா, கூட்டணியுடன் போட்டியிடுமா என்பது குறித்து அறிவிக்கப்படும்

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?துணை முதல்வர் ஓபிஎஸ் பதில்

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த ஆக.7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, கலைஞரின் மறைவு குறித்து சட்டப்பேரவை அலுவலகத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கலைஞரின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் 28ஆம் தேதி அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் வரும் 10ம் தேதி வரை நடக்கயிருக்கிறது.

இதனிடையே முக்கிய கட்சிகளான திமுக பூண்டி கலைவாணனையும், அமமுக எஸ்.காமராஜையும் தேர்தல் வேட்பாளர்களாக நேற்று அறிவித்தது. அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், தேனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பெயர் நாளை காலை அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரணப் பணிகள் முழுமையடையாத நிலையில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் முடிவுகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர். முடிவு செய்யவேண்டியது தேர்தல் ஆணையம் தான். அதிமுகவை பொருத்தவரையில் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தயார். வெற்ற பெறுவது உறுதி என்றார்.

குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு உறுதி. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு முறையாக வெளியான உடன் அதிமுக தனித்து போட்டியிடுமா, கூட்டணியுடன் போட்டியிடுமா என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
 

.