This Article is From Nov 10, 2018

முதல்வர் கனவில் மிதக்கும் விஜய்க்கு, ரஜினிகாந்த் அறிவுரை சொல்ல வேண்டும்: நமது அம்மா

முதல்வர் கனவில் மிதக்கும் விஜய்க்கு ரஜினி அறிவுரை சொல்ல வேண்டும் என சர்கார் படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து அதிமுகவின் நாளேடான நமது அம்மா நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

முதல்வர் கனவில் மிதக்கும் விஜய்க்கு, ரஜினிகாந்த் அறிவுரை சொல்ல வேண்டும்: நமது அம்மா

Rajinikanth said it's not fair to attack 'Sarkar', which has been cleared by censor board

Chennai:

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான அரசியல் த்ரில்லர் படமான 'சர்கார்' திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசை விமர்சிக்கும் வகையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களை கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், ஜெயலலிதாவின் இயர்பெயர் என கூறப்படும் கோமளவல்லி பெயர் வில்லியாக வரும் வரலட்சுமி சரத்குமாருக்கு சூட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கோவை, மதுரை, சென்னை என தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் சர்கார் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் முன்பிருந்த சுவரொட்டிகளை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய அந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதிமுகவினரின் தொடர் போராட்டம் உள்ளிட்ட நெருக்கடிகளை தொடர்ந்து, சர்கார் திரைப்படத்தில் வரும் அந்த சர்ச்சை காட்சிகள் மட்டும் நேற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சர்கார் திரைப்படத்திற்கு ஆதரவாக அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பதிவில், தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என கூறியிருந்தார்.

இந்தநிலையில் அதிமுகவின் அதிகார்ப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், "கிணறு வெட்டின ரசீதும், தணிக்கைச் சான்று ரஜினியும்" என்ற தலைப்பில் இன்று வெளியாகியுள்ள கட்டுரையில், எல்லா சான்றிதழும் பெற்று, வியாபாரத்திற்காக வந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை, வீட்டிற்கு வாங்கி வந்து அதனை திறக்கும் போது உள்ளே பல்லி கிடந்தால், எல்லா சான்றிதழ்களும் பெறப்பட்டது என்பதற்காக பல்லி விழுந்த ஹார்லிக்ஸை பருக முடியுமா?.

அரசு முத்திரையிடப்பட்ட இலவச பொருட்களை நெருப்பில் போடுவது போல காட்சி அமைப்பதும், அதனை தேசிய விருது பெற்ற இயக்குநர் ஒருவரே முன்னின்று செய்வதும் எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஏற்றத்தாழ்வை சமன் செய்வதற்கு சமூக நீதியிலான நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு போன்றதுதான், விலையில்லா பொருட்களும்.

அரசுக்கு எதிராக கண் சிவக்க பேசினால் மட்டுமே எதிர்காலத்தில் முதலமைச்சராகிவிடலாம் என்று கனவில் மிதக்கிற நடிகர் விஜய்க்கும், சரியான புரிதல் இல்லாமல் அரசாங்கத்திற்கே ஆலோசனை சொல்லி அலைகிற இயக்குனர் முருகதாசுக்கும் நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறவேண்டும். அதைவிடுத்து, கிணறு வெட்டுன ரசீது என்கிட்ட இருக்குன்னு வடிவேலு காமெடியைப் போல தணிக்கைச் சான்றை சுட்டிக்காட்டி ஒரு தவறுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வக்காலத்து வாங்கலாமா என கேள்வி எழுப்பியுள்ளது.

.