This Article is From Sep 25, 2019

Bypolls: இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளராக எம்.ஆர்.முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளராக ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Bypolls: இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

Chennai:


தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக இன்று அறிவித்துள்ளது. 

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்.21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, நாங்குநேரி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என்றும், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுவது என்றும் திமுக கூட்டணியில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்றைய தினம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக நா.புகழேந்தி அறிவிக்கப்பட்டார். 66 வயதாகும் புகழேந்தி, திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக உள்ளார். 3 முறை விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 

இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆட்சிமன்றக் குழுவினர் நேர்காணல் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, வேட்பாளர் பட்டியலை, ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இணைந்து இன்று வெளியிட்டனர்.

அதன்படி, விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளராக எம்.ஆர்.முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளராக ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்.30 ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்.1-ம் தேதி நடைபெறும், வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி அக்.3-ம் தேதி ஆகும். 

அக்டோபர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

(With Inputs From ANI)

.