எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகிறது. மொத்தம் உள்ள 31 மாவட்டங்களிலும் இதற்கான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்றைய தினம் சென்னையில் பிரமாண்ட விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. இதுகுறித்து நேற்று பேட்டியளித்த ஸ்டாலின், எம்.ஜி.ஆரின் புகழை அரசியல் ஆதாயத்திற்காக அதிமுக பயன்படுத்தி வருவதாகவும், அரசு விழா என்ற பெயரில் கட்சி விழாவாக இது நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கடந்த 2010-ம் ஆண்டின் போது திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது அவர்கள் செம்மொழி மாநாட்டை ரூ. 200 கோடி செலவில் நடத்தினார்கள். இப்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, செம்மொழி மாநாட்டு செலவில் 10 சதவீதத்தை மட்டுமே செலவழித்து நடத்துகிறோம் என்றார். செம்மொழி மாநாட்டுக்கு எவ்வளவு செலவானது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு நாங்கள் எவ்வளவு செலவு செய்கிறோம் என்ற கணக்கெல்லாம் அரசிடம் உள்ளது என்றார்.