This Article is From Apr 14, 2019

கலைஞர், ஜெயலலிதா இல்லாதது வெற்றிடமா?... NDTV-க்கு மு.க.ஸ்டாலின் பிரத்யேகப் பேட்டி!

5 வருட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியுடன் எப்படி ஒப்பிட்டு பார்க்கிறீர்கள்?

தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆட்சி அமைவதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தவகையில், இரு பெரும் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸூம் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதன்படி, பாஜக அதிமுக-வுடனும், காங்கிரஸ் திமுக-வுடனும் கூட்டணியை அமைத்துள்ளது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன, இப்படி, பரபரப்பான அரசியல் சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். அப்போது அவரிடம் முதல்முறையாக கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் தேர்தலை சந்திப்பது குறித்து கேட்டபோது,

கலைஞர், ஜெயலலிதா இல்லாதது ஒரு பெரும் வெற்றிடம் தான். ஆனால், ஜெயலலிதா இல்லாததால் அந்த கட்சி, சின்னா பின்னமாக உடைந்து போய், வாக்குகள் சிதற உள்ளது.

ஆனால், கலைஞர் இல்லாத நேரத்தில் அவர் உருவாக்கிய திராவிட முன்னேற்ற கழகம் மிகுந்த கட்டுப்பாடுடன் இருந்து ஒரு அருமையான கூட்டணியை உருவாக்கியுள்ளது. நான் மட்டமல்ல, ஒட்டு மொத்த தமிழக மக்களே என் தந்தையை (கருணாநிதியை) இழந்து தவித்து வருகின்றனர். அவர் இல்லாதது ஒரு பெரிய வெற்றிடம் தான் என்றார்.

கலைஞரின் வாழ்க்கையில் இருந்து எதை பின்பற்றுவீர்கள்? எந்த வகையில் உங்களுக்கென தனிப்பாதை அமைப்பீர்கள்?

உழைப்பு, உழைப்பு, உழைப்பு அதுவே மு.க.ஸ்டாலினிடம் எனக்கு பிடித்தது என கலைஞர் என்னை பாராட்டியதே, நான் தற்போது வரை தொடர்ந்து செயல்பட உந்துதலாக இருக்கிறது, அதையே நான் தொடர்ந்து பின்பற்றுவேன் என்று ஸ்டாலின் கூறினார்.

தொடர்ந்து அவரிடம், முதல்முறையாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பியபோது,

தமிழக மக்களின் உணர்வை புரிந்துகொண்டும், ஏற்கனவே திமுக சார்பில் கலைஞர், இந்திரா காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த நேரத்திலும் சரி, சோனியா காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த நேரத்திலும் சரி, அவர் அப்படிதான் முடிவெடுத்து அறிவித்துள்ளார். அதை பின்பற்றியே நானும் அறிவித்துள்ளேன் என்றார்.

அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து,

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு ஒரு சிறுதுளி அளவு கூட பாதுகாப்பு இல்லை. முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரும் ஒரு பெண் தான். அவரது மரணமே மர்மமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றார்.

5 வருட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியுடன் எப்படி ஒப்பிட்டு பார்க்கிறீர்கள்?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மன்மோகன் சிங் தலைமையில் திமுகவின் ஆதரவோடு இருந்த அந்த கூட்டணி அரசு, தேர்தல் நேரத்தில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது.

ஆனால், தற்போதுள்ள மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, எதையும் செய்யவில்லை, எதையும் செய்யாமல் தேவையற்ற வாக்குறுதிகளையும், பொய்யான வாக்குறுதிகளையும் அளித்து இந்தியாவின் பிரதமராக செயல்படாமல், வெளிநாடுகளின் பிரதமராக இருக்கிறார் என்பது எனது கருத்து என்றார்.


 

.