ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை கொண்டாடும் நோக்கில் கடந்த பிப்பரவரி மாதம் அதிமுக, சென்னையில் பெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது
Chennai: சென்னை ராயப்பேட்டையில் தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுக-வின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு சில மாதங்களுக்கு முன்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கப்பட்டது. ஆனால், அந்த சிலை பார்ப்பதற்கு ஜெயலலிதா போலவே இல்லை என்று தொடர்ந்து விமர்சனம் எழுந்து வந்தது. இந்நிலையில், பழைய சிலை மாற்றப்பட்டு புதியதாக ஒரு ஜெயலலிதா சிலை நிறுவப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை கொண்டாடும் நோக்கில் கடந்த பிப்பரவரி மாதம் அதிமுக, சென்னையில் பெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை ஒன்று திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சொன்னபடி சிலையும் நிறுவப்பட்டது. ஆனால், அது ஜெயலலிதா போல் இல்லை என்று கிண்டலடிக்கப்பட்டது.
அதிமுக-வின் நிறுவனர் எம்.ஜி.ஆருக்கு தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்திலேயே ஜெயலலிதாவின் சிலையும் வைக்கப்பட்டது. சிலை குறித்து பலத்த விமர்சனங்கள் வரவே, அது உடனடியாக அகற்றப்பட்டது.
கட்சி சார்பில் மீண்டுமொரு வெண்கல சிலையை வடிவமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சிலை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
புதிய சிலை நிறுவியது குறித்து மைலாப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி, ‘புதிய ஜெயலலிதாவின் சிலை அற்புதமாக உள்ளது. எங்கள் கட்சியின் இரண்டு தலைவர்களின் சிலையும் ஒன்றாக இருப்பது தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளது' என்று தெரிவித்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக, 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பின்னரும், அவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் சிகிச்சை பலனின்றி 2016, டிசம்பர் 5 ஆம் தேதி அவர் மரணமடைந்தார்.
அவர் இறந்த பிறகு அதிமுக-வில் பல்வேறு உட்கட்சி குழப்பம் ஏற்பட்டது. இன்னும் உட்கட்சி பூசல் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் சீக்கிரமே மாநிலத்தில் காலியாக இருக்கும் 20 தொகுதிகளில் இடைத் தேர்தலை சந்திக்க உள்ளது அதிமுக. அந்தத் தேர்தல் முடிவுகள் நேரடியாக ஆட்சி நீடிப்பதில் தாக்கம் ஏற்படுத்தும்.