Subashree death - சட்டவிரோதமாக பேனர் வைக்கப்பட்டு, இளம் பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.
ஹைலைட்ஸ்
- Subhashri Ravi, ஐடி நிறுவனத்தில் பணி புரிந்தவர்
- சட்டவிரோத பேனர் அவர் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது
- சாலையில் நிலை தடுமாறி விழுந்த அவர் மீது லாரி ஏறியது
Chennai: கடந்த மாதம், சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததால் கொல்லப்பட்ட சென்னைப் பெண் சுபஸ்ரீயின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், அதிமுக-வின் மூத்த நிர்வாகி பொன்னையன், அது குறித்து அதிர்ச்சியளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், “யார் பேனர் வைத்தார்களோ, அவர்களை இந்த விவகாரத்தில் குற்றம் சாட்ட முடியாது. இளம் பெண் மரணத்திற்கு யார் மீதாவது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றால், அது பேனர் விழவைத்த அந்த காற்றின் மீதுதான்” என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதிமுக-வைச் சேர்ந்த ஜெயகோபால்தான், அந்த பேனரை சட்டவிரோதமாக வைத்தவர். சுபஸ்ரீ கொல்லப்பட்ட பிறகு அவர் தலைமறைவாக இருந்தார். சில நாட்களுக்குப் பின்னர் அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ கடந்த மாதம் 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக அதிமுக-வினர் வைத்திருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக, அதிமுக, அமமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தன.
ஏற்கெனவே சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சட்டவிரோதமாக பேனர் வைக்கப்பட்டு, இளம் பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.
அதே நேரத்தில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்துக்கு வர உள்ளனர். அவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைக்க தமிழக அரசு, நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டது. அதற்கு அனுமதி கொடுத்த நீதிமன்றம், “அரசியல் கட்சிகளுக்குத்தான் பேனர் கட்டுப்பாடு, அரசுக்கு அல்ல” என்று கூறியது. இந்த நிகழ்ச்சிக்கு பேனர் வைப்பது குறித்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
விவாத நிகழ்ச்சியின்போது ஸ்டாலின் குறித்துப் பேசும்போது, “மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் பொய் சொல்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கட்டும். கருணாநிதியின் காலத்தில் இருந்தே, எவ்வளவு பேனர்கள் வைக்கப்பட்டன என்பதை நீதிபதி அறிவார். பேனர் வைப்பது என்பது மக்களிடம் தொடர்பை ஏற்படுத்த ஒரு வழியாகும்” என்றார்.
With input from PTI
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)