அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா செப்டம்பர் 22, 2016-ல் அனுமதிக்கப்பட்டார்.
Chennai: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-வது நினைவுநாளான இன்று சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
'அம்மா' என்று தமிழகத்தில் பரவலாக அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் செப்டம்பர் 22, 2016-ல் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ல் காலமானார்.
1948-ல் பிறந்த ஜெயலலிதா, 1991 முதல் 2016 வரையிலான கால கட்டத்தில் தமிழக முதல்வராக 5 முறை மொத்தம் 14 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். 1982-ல் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது, ஜெயலலிதா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்.22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை முதலில் கூறும்போது, காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று விளக்கம் அளித்தது.
இதைத்தொடர்ந்து, காய்ச்சல் குறைந்திருப்பதாகவும், மருத்துவமனையிலேயே தங்கி சில நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிக்கை வெளியானது. எனினும் நாட்கள் கடந்தது, அவர் மருத்துவமைனயில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. பின்னர் லண்டனில் இருந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வரவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
பின்னர் அக்டோபர் மாதத்தில் ஜெயலலிதாவுக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதால் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு வரவைக்கப்பட்டதாக மருத்துவனை தெரிவித்தது. தொடர்ந்து 70 நாட்களுகு மேலாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்ந்தது. இதையடுத்து, டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு அளவில், ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்காக அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் வரை இந்த அமைதிப் பேரணி நடைபெற்றது.