This Article is From Aug 02, 2018

திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் மாரடைப்பால் மரணம்

திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸின் மரணத்தை அடுத்து 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத்தில் அதிமுகவின் எண்ணிக்கை 115 ஆகியுள்ளது

திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் மாரடைப்பால் மரணம்
Chennai:

69 வயதான அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் மதுரை மாவட்டத்தில் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். மூன்று முறை எம்எல்ஏவான இவர் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்து வந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் உள்ள அவரது வீட்டுக்கு இரங்கல் தெரிவிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே. போஸின் வேட்புமனு சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவரது தேர்தல் ஆவணங்களில் கைநாட்டு இட்டிருந்தார். திமுக முதலிய எதிர்க்கட்சிகள் அப்போது இதுகுறித்து ஐயம் எழுப்பி இருந்தனர். ஜெயலலிதா சுயநினைவோடு இக்கைநாட்டினை இட்டாரா என்று எழுப்பப்பட்டது.

ஏ.கே. போஸின் வேட்புமனு ஆவணங்கள் போலியானவை என்றும் அரசு மருத்துவர் தவறான தகவல்களை அளித்துள்ளார் என்றும் புகார் தெரிவித்து இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஏ.கே. போஸ் இதற்கு முன்பே 2006இல் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராகவும் 2011இல் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வாகியுள்ளார். இவர் தற்போது இயற்கை எய்தியதை அடுத்து சட்டமன்றத்தில் அதிமுகவின் எண்ணிக்கை 115 ஆகியுள்ளது.

.