New Delhi: நீட், நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர திட்டங்களை அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்தத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அஇஅதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை லோக்சபாவில் பேசியுள்ளார்.
லோக்சபாவின் கேள்வி கேட்கும் நேரத்தில் பேசிய தம்பிதுரை நுழைவுத் தேர்வுகள் பற்றி கேள்விகள் எழுப்பினார், ‘நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு மாநிலங்களுக்கு உரிமை அளிக்கப்பட வேண்டும். மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் மருத்துவர்கள் குறைபாடு வந்ததற்கும் மத்திய அரசு இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துவதால் தான். என்.டி.ஏ அமைப்பு மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 12 ஆம் வகுப்புக்குப் படிப்பதை விட, நுழைவுத் தேர்வுகளுக்குப் படிப்பதை மாணவர்கள் பிரதானமாக்கிக் கொள்வர். இதனால், உயர்வகுப்பினர்கள்தான் பயனடைவர்’ என்று பேசினார்.
நீட், நெட் போன்ற தேர்வுகளை நடத்த என்டிஏ அமைப்பை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.
இந்நிலையில் என்டிஏ குறித்து பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘கணினிகள் மூலமே இந்த நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும். ஆனால், ஆன்லைனில் இந்தத் தேர்வுகளை நடத்தப்படாது. ஏனென்றால் சில இடங்களில் இணையதள வசதி இருக்காது. எனவே, கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள் மூலமே தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்தவுகளை முதலாம் ஆண்டு நடத்துகையில் பேனா மற்றும் பேப்பர் மூலம் எழுதிக் கொடுக்கும்படி இருக்கும்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.