மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவுக்கு இரட்டை தலைமை தேவையில்லை, ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
இதேபோல், அமைச்சர் சி.வி.சண்முகமும், திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்கள் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது என்று கூறிவருகின்றனர். இப்படி, பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
முன்னதாக, மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், அதிமுகவை சேர்ந்த ரவீந்திரநாத் அல்லது வைத்தியலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற பேச்சு இருந்தது. ஆனால், அமைச்சரவையில் இருவருக்கும் இடம் கிடைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, துக்ளக் இதழில் வெளியிட்ட ஒரு கார்ட்டூன் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அறைக்குள் அமர்ந்து விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க வெளியே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் காத்து நிற்பது போல வரையப்பட்டு, ‘உஸ்ஸ்... யாரும் அழப்படாது. நம்மளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்' என்ற வாசகங்களை அதிமுகவினரே சொல்வது போல துக்ளக் குறிப்பிட்டிருருந்தது.
இதைத்தொடர்ந்து, அதிமுக-வை விமர்சனம் செய்வதை குருமூர்த்தி நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் காழ்புணர்ச்சியோடு ஏன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கடுமையாக பதில் விமர்சனம் செய்தனர்.
மேலும், ஒற்றைத் தலைமை குறித்து சர்ச்சை எழுந்த போதும், ஒன்றரை கோடி பேர் கொண்ட அதிமுகவில் அண்ணன் - தம்பி பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். எப்படியாவது கட்சியை உடைத்து விடலாம் என நினைத்தால், அது நிறைவேறாத கனவு. அதனால், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாய் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கைகளை பின்பற்றி 'கப்சிப்' என்று இருக்க வேண்டும் என்று ஜெயக்குமார் அறிவுறித்தியிருந்தார்.
இப்படி, தேர்தல் தோல்வி, குடும்ப அரசியல், உட்கட்சி பிரச்சனைகள், கூட்டணி குழுப்பங்கள் என ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.