This Article is From Apr 18, 2019

3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்! - திமுக பரபரப்பு புகார்

காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. எனினும் பல்வேறு இடங்களில் மக்கள் காலை 6.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்

3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்! - திமுக பரபரப்பு புகார்

தமிழகம் முழுதும் பிற்பகல் 3 மணிக்கு மேல் அனைத்து வாக்குச்சாவடிகளையும் அதிமுக கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 19 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. .

தமிழகத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 66,702 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், தமிழகத்தின் 8,293 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. எனினும் பல்வேறு இடங்களில் மக்கள் காலை 6.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

அனைத்து இடங்களிலும் மக்கள் வாக்களிக்க தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. பிற்பகல் 1 மணி
நிலவரப்படி, 39.49% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், மக்கள்
நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுதும் பிற்பகல் 3 மணிக்கு மேல் அனைத்து வாக்குச்சாவடிகளையும் அதிமுக கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு துவங்கிய காலை முதலே வாக்காளர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெருந்திரளாக வாக்களித்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மாலை 3 மணிக்கு மேல், தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை கைப்பற்றிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதற்கு காவல்துறையினரும் ஒத்துழைப்பு தரும் வகையில், காவல் துறை பாதுகாப்பினை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாகவும், வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அந்த நேரத்தில் செயலிழக்கச் செய்யப் போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

இதனை தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், நியாமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டுமென்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

.