This Article is From Oct 18, 2018

அதிமுக-வின் 47வது ஆண்டு விழா: திமுக-வை வறுத்தெடுத்த முதல்வர்!

‘என்னை நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லவில்லையே?’- திமுக-வுக்கு பன்ச் கொடுக்கும் முதல்வர்

அதிமுக-வின் 47வது ஆண்டு விழா: திமுக-வை வறுத்தெடுத்த முதல்வர்!

தமிழகத்தின் ஆளுங்கட்சியான அஇஅதிமுக தொடங்கி 47 ஆண்டுகள் ஆனதை நேற்று அக்கட்சி கொண்டாடியது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் போது பேசிய முதல்வரும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘என் மீது ஊழல் குற்றம் சாட்டி, அரசை கவிழ்க்கலாம் என்று திமுக பகல் கனவு காண்கிறது. என் மீது அவப்பெயரை ஏற்படுத்தி, தமிழக அரசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தலாம் என்று திட்டம் தீட்டுகிறது திமுக. ஆனால், நானோ அரசோ எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க மட்டும் தான் உள்ளது. எந்த நீதிமன்றமும் என்னைக் குற்றவாளி என்று சொல்லவில்லை. இது அரசியல் ஆதாயத்துக்காக போடப்பட்டுள்ள வழக்கு. சட்டபூர்வமாக அதை எதிர்கொள்வேன்.

திமுக, என்பது ஒரு குடும்ப நிறுவனம். அதில் கருணாநிதியின் குடும்பத்தினர் மட்டும் தான் தலைமை பொறுப்புகளுக்கு வர முடியும். சாதாரண நபர்கள் அந்தக் கட்சியில் மேல் மட்டத்துக்கு வரவே முடியாது.

ஆனால், அதிமுக-வைப் பொறுத்தவரை என்னைப் போன்ற விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் கூட, தலைமை பொறுப்புக்கு வரலாம். இது எப்போதும் திமுக-வில் சாத்தியமே இல்லை' என்று பேசினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை, தனது நெருங்கிய உறவினர்களுக்கு அளித்ததாக சில மாதங்களுக்கு முன்னர் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்பத்துறை இயக்குனர் சார்பாக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். அப்போது, நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கப்பட்டதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை மறுத்த நீதிபதி, முதல்வர் கட்டுப்பாட்டில்தானே நெடுஞ்சாலைத் துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் உள்ளது என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் அதிருப்தி தெரிவித்து, வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.