2019, மார்ச் 22 ஆம் தேதி, ஆறுமுகசாமி கமிஷன் குறித்து ஸ்டாலின், சேலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின் மேடையில் சரமாரி விமர்சனத்தை முன் வைத்துள்ளார்- அதிமுக
Chennai: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரிக்க, தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசி வருவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அந்தக் கட்சி, தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளது.
அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகாரில், ‘திமுக தலைவர் ஸ்டாலின், ஆறுமுகசாமி கமிஷன் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். அவர் திமுக ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சுதந்திரமான ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.
ஒரு கமிஷன், குறிப்பிட்ட விவகாரம் குறித்து விசாரித்து வரும்போது, அது குறித்து எந்த வித கருத்தும் சொல்லப்படக் கூடாது. ஆனால், தேர்தல் சமயத்தில் ஸ்டாலின், இதைப் போன்ற கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயலாகும்.
குறிப்பாக 2019, மார்ச் 22 ஆம் தேதி, ஆறுமுகசாமி கமிஷன் குறித்து ஸ்டாலின், சேலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின் மேடையில் சரமாரி விமர்சனத்தை முன் வைத்துள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2016, செப்டம்பர் 22 ஆம் தேதி, சென்னை, கீரிம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா. தொடர்ந்து இரண்டு மாதங்கள் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து டிசம்பர் 5 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி அவர் மரணமடைந்தார். அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்துதான், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது.