பாஜகவுடன் கூட்டணி அமைக்க நீட் விலக்கு மசோதாவை நிபந்தனையாக அதிமுக முன்வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் 2019 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயராகி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைகளும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அதேபோல தேர்தலை எந்தவித பிரச்னையுமின்றி நடத்தி முடிக்க தேர்தல் ஆணையமும் வேலைகளை செய்து வருகிறது.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக நடுவே கூட்டணி உறுதியாகிவிட்டது. அதேபோல், அதிமுக தரப்பில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால், பாஜகவுடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கப்போகிறது என தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதை உறுதி செய்யும் வகையில் தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் பேட்டியளித்தார்.
இந்நிலையில், இன்று இதுகுறித்து கருத்து தெரிவத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
தேர்தல் நெருங்கும் போது வாக்குறுதிகளை அள்ளி விடும் பிரதமர் மோடி, பிரதமர் நரேந்திர மோடி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தமிழக மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தருவாரா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க நீட் விலக்கு மசோதாவை நிபந்தனையாக அதிமுக முன்வைக்க வேண்டும். தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் என்ற அரக்கன் கொன்று புதைத்திருக்கிறது எத்தனையோ அறிவிப்புகளை வெளியிடும் மோடி நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.