This Article is From Feb 20, 2019

மத்தியில் அமையும் ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கவே கூட்டணி: தம்பிதுரை

மத்தியில் அமையும் ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

மத்தியில் அமையும் ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கவே கூட்டணி: தம்பிதுரை

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், இந்திய ஜனநாகயக கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது,

மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும், கூட்டணி ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும். மக்களவைத் தேர்தல் கூட்டணியில் அதிமுகவுடன் பாமக இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது. தேர்தல் கூட்டணி என்பது கொள்கை ரீதியில் அமைக்கப்படுவதல்ல. எதிரியை வீழ்த்த வேண்டும், மத்தியில் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் அமைக்கப்படுகிறது.

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த காரணத்தால் மத்திய அரசிடம் இருந்து கேட்ட நிதியை பெறமுடியவில்லை. வரப்போகும் ஆட்சி கூட்டணி ஆட்சி என்பதால் ரூ.20 கோடி என்ன, ரூ.50 ஆயிரம் கோடி கூட கேட்டுப்பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியால் தமிழக மக்களுக்கு லாபம்.

இதனால் கூட்டணி வைத்துள்ள கட்சியின் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக அர்த்தமல்ல. அவர்களின் கொள்கை வேறு, எங்களின் கொள்கை வேறு. இரு கட்சிகளும் ஒன்றையொன்று அந்தந்த காலகட்ட செயல்பாடுகளுக்கேற்ப விமர்சித்துள்ளன. அதிமுக வலிமையான கட்சி. அடுத்து மத்தியில் அமையும் ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும்.

பாராளுமன்ற தேர்தல் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறப்போவது இல்லை. இந்த விரக்தியின் விளிம்பில் மு.க.ஸ்டாலின் சவால்கள் விட்டுக்கொண்டு இருக்கிறார் என்று அவர் கூறினார்.

.